மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம் - செயலாளர் பூ.பிரசாந்தன்!!


எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொது செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார். 

நேற்றைய தினம் (24) திகதி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பில் உள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இடம் பெற்ற  செயற்குழு கூட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் கட்சியினால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கட்சியின் அலுவலகத்தில் இடம் பெற்ற போது கட்சியின் பொதுசெயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் ஒன்றிணைந்து போட்டியிடுவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பகிரங்கமாக அழைப்பு விடுப்பதாகவும், கிழக்கு மாகாணத்தை நேசக்கின்ற அனைவரும் ஒரே கூரையின் கீழ் ஒன்றினைந்து செயற்பட வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டில் மக்கள் மாற்றத்தை விரும்பியிருப்பதால் ஜனாதிபதி தேர்தலில் அதிக வாக்குகளை வழங்கி தற்போதைய ஜனாதிபதியை வெற்றிபெற செய்துள்ளனர்.

தமிழ் அரசு கட்சியில் இருந்து பிரிந்த அனைவரும் ஒன்று சேர்ந்து கிழக்கில் ஒருமித்து பயணிக்க முன்வர வேண்டும்.

கிழக்கு மாகாண மக்களின் நன்மைக்காக எம்முடன் சேர்ந்து பயணிக்க விருப்பமுடைய எவரும் எம்முடன் இணைய முடியும். 

மக்கள் தெளிவுடன் இருக்க வேண்டும். மக்கள் கடந்த காலங்களில் விட்ட பிழைகளை மீண்டும் விடாது. இம்முறை எமது கட்சி மட்டக்களப்பு, அம்பாரை, திருகோணமலை ஆகிய 3 மாவட்டங்களிலும் போட்டி போடவுள்ளது, அனைவரும் ஒருமித்து எம்முடன் சேர்ந்து பயணிக்க முன்வர வேண்டும்.

எமது கட்சியின் ஊடாக 3 பிரதிநிதித்துவத்தை பெற முடியும் அதனூடாக கிழக்கு மக்களின் நலனுக்காக ஒரே கூரையின் கீழ் நாம் பயணிப்போம். அதனடிப்படையில் பொதுவான சிந்தனையில் அனைவரும் ஒன்று சேர முன்வர வேண்டும் என கோரிக்கை முன்வைப்பதாக தெரிவித்தார்.

மக்களுக்கு தெரியும் தமிழரசுக் கட்சி சுக்குநூறாக உடைந்து 4 பக்கமாக நிற்கின்றது, அது மட்டுமல்லாது தற்போது பொது கட்டமைப்பு எனும் பேரில் இனி மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. இதை மக்களும் நன்கு அறிவார்கள் என்றார்.


Powered by Blogger.