உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட சத்துருக்கொண்டான் படுகொலையின் 33ஆவது ஆண்டு நினைவு தினம்!!


மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலையின் 33ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று (09) திகதி சனிக்கிழமை மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின்போது நினைவுத்தூபியில் நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதனை தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்கான மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மதகுருமார், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு  மாநகரசபையின் உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், ஊர் பிரமுகர்கள் உள்ளிட்ட படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கடந்த 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09ஆம்  திகதி இராணுவத்தினருடன் இணைந்த ஊர்காவல் படையினரால் சத்துருக்கொண்டான், கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடி கிராமங்களைச் சேர்ந்த கர்பிணித் தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகள், அங்கவீனம் அடைந்தவர்கள் என பலர் கொண்டுசெல்லப்பட்டு  படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இதில் 5 கைக்குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் உட்பட 186 பேர் படுகொலை  செய்யப்பட்டுள்ளனர்.

இந்த படுகொலை தொடர்பாக விசாரணைகள் நடைபெற்றபோதும் இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்தவித தண்டனைகளும் வழங்கப்படவில்லையென இப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக கவலை தெரிவித்து வருகின்றதுடன் இச்சம்பவம் தொடர்பாக சர்வதேச விசாரனையை வேண்டி நிற்பதுடன், குறித்த படுகொலைக்கு ஜனாதிபதியிடம் நீதி வேண்டிய மகஜர் ஒன்றினை மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரிடம்  நிகழ்வின் ஏற்பாட்டாளர்களினால் வழங்கி வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.Powered by Blogger.