சிவ பெருமானுக்கு உகந்த நாளாகிய பிரதோஷ வேளையில் மட்டக்களப்பு கரவெட்டி நெல்லிச்சேனையில் அமைத்துள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் உலக மக்களின் நன்மை வேண்டி 210 சித்தர்கள் வேள்வி மிகப் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
முறையாக காப்புக் கட்டி சாப நிவர்த்தி செய்து பெறப்பட்ட மூலிகைகளை கொண்டு ஒரு லட்சம் சிவ பஞ்சாட்சர ஜெபத்துடன் சர்வ வல்லமை வாய்ந்த, 210 சித்தர்கள் வேள்வி உலக சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான தலைவர் சிவசங்கர் குரு ஜீ தலைமையில் ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் ஸ்தாபகர் சிவஸ்ரீ வாமதேவ சிவாச்சாரியார் அரியரெட்ணம் குருக்கள் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக இலைங்கைக்கான சித்தர்கள் குரல் அமைப்பின் தலைவர் ரீ.ஆதித்தியன் மற்றும் உப தலைவர் எஸ்.மனோகரன் ஆகியோரது ஏற்பாட்டில் மிகப்பிரமாண்டமான முறையில் இடம்பெற்றது.
குறித்த மகா வேள்விக்கு சிவஸ்ரீ சே.கு.உதயகுமார குருக்கள், சித்தர்கள் குரல் அமைப்பின் ஆலோசகர் நமசிவாயம் மகேஸ்வரன் ஜீ, இலங்கையின் அனைத்து பாகங்களிலும் இருந்து சித்த வழிபாடுகளில் உள்ள நுற்றுக்கும் மேற்பட்ட தவசிகள், யோகிகள், ஆன்மீக பெரியார்கள், சிவச்சார்யார்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானின் அருளாசியினை பெற்றிருந்தனர்.
இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய சிவனது சிலையான 36 அடி சீல மேனி சிவனுடைய சிலையினை மூலஸ்தானமாக கொண்டு 7 அடி உயர விஸ்வரூப லிங்கேஸ்வருக்கு விசேட அபிஷேக பூசைகள் இடம் பெற்றதனைத் தொடர்ந்து, உலக மக்களின் நன்மைக்கான 210 சித்தர்கள் மகா யாகம் இடம்பெற்றதுடன் பூசையின் நிறைவில் பக்தர்களுக்கு விபூதிப்பிரசாதம், சிவ சின்னமான ருத்ராட்சமும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









