காவேரிக் கலா மன்றம் மற்றும் தினகரன் பத்திரிகை இணைந்து தேசிய ரீதியில் நடத்திய சிறந்த நூல்களைத் தெரிவு செய்யும் போட்டி, மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஆகியவற்றின் வெற்றியாளர்களுக்குப் பரிசில் வழங்கும் விழாவும், வாழ்நாள் சாதனையாளர் கௌரவிப்பும் இன்று (01) காலை வெள்ளவத்தையில் உள்ள கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சமய மற்றும் கலாசார விவகார பிரதியமைச்சர் முனிர் முழப்பர் மற்றும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனா இளங்குமரன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தேசிய மட்டத்தில் சிறந்த நூல்களாகத் தெரிவு செய்யப்பட்ட படைப்பாளிகளுக்கான கௌரவிப்புகள் இதன்போது வழங்கப்பட்டன. அந்தவகையில், கலாபூஷணம் முத்து மாதவனின் ‘வேரை மறந்த விழுதுகள்’ (சிறுகதை), ரா. நித்தியானந்தனின் ‘கடவாசல்’ (நாவல்), மூதூர் முகைதீனின் ‘வண்டில் மாமா’ (சிறுவர் பாடல்கள்), வி.ஆர். வயலட்டின் ‘மலரும் யுகத்திற்கு…’ (மொழிபெயர்ப்பு), இக்பால் அலியின் ‘வெற்றியில் சாய்ந்து உறங்கு’ (கவிதைத் தொகுதி), பெனி. யேசுவின் ‘ஈட்டி’ (திறனாய்வு), டி. எம். திசாநாயக்கவின் ‘வைத்திய பராத, நெகிடின ஜீவித’ (சுய வரலாறு) மற்றும் கிருஷ்ரிணா ஏஞ்சலின் மிதுர்சனின் ‘ஆமென்’ (புதினம்) ஆகிய நூல்கள் பரிசில்களை வென்றெடுத்தன.
இதனைத் தொடர்ந்து, தொழுநோய் விழிப்புணர்வு தொடர்பாக மாணவர்களிடையே நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. இப்போட்டியில் துறைநீலாவணை மகா வித்தியாலய மாணவி சாந்த குமார் ஷனுவி முதலாம் பரிசினையும், மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி மாணவன் முஹம்மட் நியாஸ் ஹாரித் அஹ்மட் இரண்டாம் பரிசினையும், ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரி மாணவி கே. லக்ஷணா மூன்றாம் பரிசினையும் பெற்றுக்கொண்டனர். அத்துடன் கம்பளை இந்துக் கல்லூரி மாணவர்கள் ஜே. சச்சின், எம். பவிஷாலினி மற்றும் கொழும்பு புனித ஜோன்ஸ் மகா வித்தியாலய மாணவன் முஹம்மட் அல்தாஃப் ஆகியோர் ஆறுதல் பரிசில்களைப் பெற்றுக்கொண்டனர்.
மேலும், கலை மற்றும் இலக்கியத் துறைகளில் நீண்டகாலமாக அரிய சேவையாற்றிய மூன்று வாழ்நாள் சாதனையாளர்கள் இதன்போது விசேடமாக கௌரவிக்கப்பட்டனர். பேராசிரியர் எம்.எஸ்.எம் அனாஸ் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் அனந்த பாலகிட்ணர் ஆகியோருடன் ஊடகவியலாளர் அந்தோணி லியோன் ராஜ் ஆகியோர் வாழ்நாள் சாதனையாளர்களாக கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய சிறப்பு அதிதிகள், மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிப்பதன் அவசியத்தையும் சமூக மாற்றத்திற்கு இலக்கியங்கள் எவ்வாறு துணைபுரிகின்றன என்பதையும் சுட்டிக்காட்டினர். காவேரிக் கலா மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் எழுத்தாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்ததுடன், குறித்த நிகழ்வில் விசேட அதிதியாக முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளரும், அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவருமான அதி வணக்கத்திற்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்ணான்டோ கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.


.jpg)

.jpg)