பாடசாலை மட்ட மாணவிகளுக்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி - பன்சேனை பாரி வித்யாலய அணி சம்பியன்!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் மகளிர் உதைப் பந்தாட்ட அணிகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு (01) திகதி மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.
வேல்முருகன் டிஸ்ரிபியூட்டர்ஸ் ஸ்தாபனத்தினரின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நேற்று (02) திகதி ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வில் 4 கல்வி வலயங்களில் இருந்து 16 பாடசாலைகள் கலந்து கொண்டு இடம்பெற்ற உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகள் சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டு இரண்டு நாட்களாக இடம்பெற்றது.
16 பாடசாலை அணிகள் மோதிய இத்தொடரில் நகர்ப்புற தேசியப் பாடசாலைகளுடன் போட்டியிட்டு பலத்த போட்டியின் மத்தியில் 03/00 கோள் வித்தியாசத்தில் முதலாவது இடத்தை மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு உட்பட மட்/பன்சேனை பாரி வித்யாலய அணியினர் வெற்றி கிண்ணத்தையும் 100,000/= பெறுமதியான விளையாட்டுப் பொருட்களையும் தம்வசப்படுத்தி கொண்டனர்.
மட்/ முனைக்காடு விவேகானந்தா மகா வித்தியாலய அணியினர் இரண்டாவது இடத்தை பெற்று வெற்றிக் கிண்ணத்தையும் 75,000/= பெருமதி உள்ள விளையாட்டு உபகரணங்களையும் பெற்றுக் கொண்டனர்.
மூன்றாவது இடத்தை மிகத் தொலைவிலிருந்து வருகைதந்து இப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக தமது திறமைகளை வெளிக்காட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மட்/கட்டு முறிவு குளம் அ.த.பாடசாலை இத்தொடரில் நான்கு போட்டிகளில் கலந்து கொண்டு 06/00, 05/00, 01/01 ,00/06 கோள்களை போட்டு மொத்தமாக இத்தொடரில் அதி கூடிய 18 கோள்களை போட்டு மூன்றாவது இடத்தை பெற்று 55,000/= பெருமதி உடைய விளையாட்டு உபகரணங்களை பெற்றுக் கொண்டனர். மேலும் இத்தொடரில் கலந்து கொண்ட அனைத்து அணிகளுக்கும் பத்தாயிரம் ரூபாய் பெறுமதி வாய்ந்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இத்தொடரின் சிறந்த தொடர் ஆட்டநாயகியாக ஏஸ்.ரூவனிதா, இறுதிப் போட்டியின் சிறந்த ஆட்டநாயகியாக பி.ரேணுஸ்கா மற்றும் இத்தொடரின் சிறந்த கோல் கீப்பர் ஆக ஆர்.பிரியதர்ஷனா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இத்தொடரில் அதிகூடிய கோள்களை போட்ட கட்டுமுறிவு என்.நந்தினி அவர்களுக்கு அவர்களின் திறமைக்கான அங்கீகாரமாக துவிச்சக்கர வண்டி சிறப்பு பரிசாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வேல்முருகன் டிஸ்ரிபியூட்டர்ஸ் ஸ்தாபகர் சண்முகம் காசிப்பிள்ளை, வேல்முருகன் டிஸ்ரிபியூட்டர்ஸ் பங்குதாரர்களான கா.சதீசன், கா.வித்தியா ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்வி விளையாட்டுக்கான உதவி உடற்கல்வி பணிப்பாளர் வி.லவக்குமார், கல்குடா உடற்கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர் த.ரமேஸ், மட்டக்களப்பு மேற்கு உடற்கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர் சதாசிவம் சந்திரகுமார், பட்டிருப்பு உடற்கல்வி உதவி பணிப்பாளர் ஆர். உதயகுமார், உதவி ஆணையாளர் தலைமை அலுவலகம் சந்திர ஸ்ரீ சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோட்டமுனை விளையாட்டு கழகத்தின் பணிப்பாளர்களான எஸ்.ரஞ்சன், ஈ.சிவநாதன், கோட்டமுனை விளையாட்டுக்கழகத்தின் தலைவர் பீ.சடாட்சரராஜா, செயலாளர் வீ.ஜெயதாசன், நடுவர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் உதவிகளுடன் இத்தொடர் சிறப்பாக நடாத்தி வைக்கப்பட்டது.
ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலைகளின் பழைய மாணவர்கள், பொதுமக்கள், உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





