அமைச்சுப் பதவிகளை இன்னமும் துறக்கவில்லையா? என்ன சொல்கிறது ஜனாதிபதி செயலகம்?






தமது பொறுப்புக்கள் அனைத்திலும் இருந்து தாம் விலகுவதாக முஸ்லிம் அமைச்சர்கள் அறிவித்தும், அவர்கள் இராஜினாமா செய்த கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இதுவரை அனுப்பப்படவில்லை என ஜனாதிபதி செயலகத்தை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.










ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ், மற்றும் ரிசாத் பதியுதீன் போன்றோர் பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார். இந்நிலையில் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கூட்டாக தமது அமைச்சுப் பதவிகளை துறப்பதாக விசேட செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.





இந்நிலையில், இது தொடர்பில் ஜனாதிபதிக்கு இன்னமும் அமைச்சர்கள் பதவி துறந்தமை தொடர்பான இராஜினாமாக் கடிதம் கிடைக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.





நேற்று (05) இரவு வரையில் எந்தவொரு அமைச்சரும் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்கவில்லையென ஜனாதிபதி செயலக உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.





தமது வாகனங்களை ஒப்படைக்கவில்லையெனவும், தமது தனிப்பட்ட செயலணியை பதவி நீக்கவில்லையென, முஸ்லிம் அமைச்சர்கள் பதவி வகித்த அமைச்சுக்களின் செயலாளர்களிடம் கேட்டபோது அவர்களும் இதனையே குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.





எவ்வாறாயினும், முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காஸிமிடம் இணைய ஊடகம் ஒன்று இது தொடர்பில் வினவியது, அதற்குப் பதில் வழங்கிய அவர், முஸ்லிம் அமைச்சர்கள் தமது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.





இதேவேளை, இவ்வாறு இராஜினாமா செய்த எவரும் தமது உத்தியோகபுர்வ வாகனங்களை ஒப்படைக்காதுள்ளதாகவும், தமது தனிப்பட்ட செயற்குழு உறுப்பினர்களை நீக்க வில்லையெனவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.





இதுவொருபுறமிருக்க, அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பான கடிதம் ஜனாதிபதியூடாக இதுவரை சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Powered by Blogger.