மீண்டும் அனுரதான் ஜனாதிபதி, அவரை செயற்பட விடுங்கள் - ஈழத்தமிழர் முன்னனி கட்சியின் தலைவர் ஜெயகுமார் சரவணா எதிர்க்கட்சிகளிடம் வேண்டுகோள்!!

அனுரதான் மீண்டும் ஜனாதிபதியாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அவர் ஜனாதிபதியாகி ஒரு வருடங்களே கடந்துள்ளது, அவருக்கு இன்னும் நான்கு வருடங்கள் உள்ளது அது வரை அவரை செயற்பட விடுங்கள், பிறகு பார்ப்போம் அவரை மாற்றுவதா இல்லையா என்று ஈழத்தமிழர் முன்னனி கட்சியின் தலைவர் ஜெயகுமார் சரவணா எதிர்க்கட்சியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு வொயிஸ் ஒஃப் மீடியா ஊடக கற்கைகள் வள நிலையத்தில் இன்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் இங்கு கருத்து தெரிவிக்கையில், 

நாங்கள் ஐந்து வருடத்திற்கு முன் செய்ததை இந்த ஜனாதிபதி செய்து வருகின்றார். அதனை நாம் பாராட்டுகின்றோம். நாடே அழிந்து போகும் நிலையில் இருந்த போது இந்த நாட்டை கட்டியெழுப்ப முயற்சிக்கின்றார். இந்த நாட்டை அனுர பாரமெடுத்து ஒரு வருடங்களே ஆயிருக்கின்றது அவரை நாம் இன்னும் நான்கு வருடங்கள் விட்டே பார்க்க வேண்டும். 

இந்த அரசுக்கு எதிராக மற்ற எதிர்கட்சிகள் முன்னெடுக்கும் போராட்டம் நீர்த்துப்போகும், இவர் செய்யும் அளவிற்கு மற்ற கட்சிகள் இல்லை. சஜித் பிறேமதாசாவை யாருமே ஒரு தலைவராக மதிப்பதில்லை. தற்போது பாருங்க தமிழர்களின் வாக்குகள் முழுவதையும் பெற்ற சஜித் பாராளுமன்றத்தில்  இதுவரை தமிழர்களுக்கு ஆதரவாக எதையும் கதைத்ததில்லை. ஏனென்றால் அவர் தனி பெளத்த மதத்தை சார்ந்தவர். 

தற்போது ஊழல் அற்ற இலங்கையாக மாறி வருவதை நாம் காண்கின்றோம். அதனால் நாம் இந்த அரசை பாராட்டியே ஆகனும். இந்த அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தது யாரென்று பார்த்தால் நாமல் ராஜபக்ஸவே, அவருடைய தகப்பனாரும் கடைசி காலகட்டத்தை எட்டியுள்ளார், அவருடைய சத்தப்பா மார்களும் அரசியலில் தோற்றுப் போய் நாட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்டவர்களே,  அவர் தன்னுடைய இருப்பை தக்க வைத்துக் கொள்ள முடியாது, அவரை நாம் ஒரு நண்பனாகவே பார்க்கின்றோமே ஒழிய அவரை வீரராக பார்க்க முடியாது. நானும் அவரை 2 தடவை சந்தித்திருக்கின்றேன் அப்போது கூட நான் அவரை நண்பனாகவே சந்தித்திருக்கின்றேன்.

ஆனால் அனுரவை பார்த்தாலே தெரிகிறது அவர் ஒரு தலைவர் என்று, அவர் முதல் தடவையாக ஜனாதிபதியாகியிருக்கின்றார் அவர் செய்யும் நல்ல விடையங்களை வைத்து மீண்டும் மக்கள் அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்யலாம்.

எமது செயற்பாடு முன்னால் போராளிகளை ஒன்றினைத்து தமிழரசுக் கட்சியின் மாயையை இல்லாமல் பண்ணுவதே. எனக்கு பின்னால் பல போராளிகள் நிற்பார்கள் எனக்கு புலம்பெயர் நாடுகளில் இருந்து ஆதரவு கிடைக்கவுள்ளது.

எதிர்வரும் தேர்தலில் எமது கட்சி சினிமா பாணியில் செயற்படவுள்ளது. புது கட்சியாக பலர் பார்ப்பார்கள் ஆனால் எமது வீரியம் மிக விரைவில் அனைவருக்கும் தெரியவரும்.

கிழக்கு மாகாணத்திற்கு நான் வருவதற்கு கருணா அம்மான்தான் காரணம். ஆனால் கடந்த ஓகஸ்ட் மாதம் அவரது கட்சியில் இருந்து விலகினேன். அதற்கு காரணம் அவரது கட்சியில் சிறந்ததொரு நிருவாக கட்டமைப்பு இருக்கவில்லை அதனாலேயே நான் அவரை விட்டு விலகினேன்.

நான் அவருடன் சேர்ந்த காலத்தில் பிள்ளையான் பிரதேச வாதத்தை விதைத்ததனால் அவருடன் சேர முடியாததனாலேயே நான் கருணா அம்மானுடன் சேர வேண்டி ஏற்பட்டது.

இன்று அரசாங்கம் செய்யும் போதை ஒழிப்பை கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் அம்மான் படையின் ஊடாக செய்திருந்தோம். அம்மானை நான் மதிக்கின்றேன், அவர் நாட்டிற்காக போராடியதற்கு நான் அவரை மதிக்கின்றேன். அவர் என்னை அச்சுறுத்தினால் நான் அதற்காகவும் செயற்பட வேண்டி ஏற்படும்.

பௌத்த மதத்தை சேர்ந்த சாணக்கியனை நீங்கள் மட்டக்களப்பில் பாராளுமன்ற உறுப்பினராக்கி விட்டு எப்படி நாம் புத்தர் சிலை தொடர்பாக கதைப்பது. சாணக்கியன் எனும் நபரும் சுமந்திரனும் இருக்கும் வரை இவ்வாறான பிரச்சனைகளுக்கு நாம் தீர்வு காண முடியாது.

நல்ல சிந்தனையுள்ள இளைஞர்களை நாம் புதிதாக கொண்டு வந்து மாவட்டத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

இலங்கையில் போட்டி போடக் கூடிய தலைவர்கள் இல்லாதமையினாலேயே, இன்று அனுற ஜனாதிபதியாக வந்துள்ளார்.

கிழக்கில் பிள்ளையான் கட்சி ஆளுமை மிக்க கட்சியாக இருந்தது. வழக்கை கண்டு ஓடி ஒழித்த வியாழேந்திரனை எப்படி தலைவர் என்று சொல்லுவது. கருணாம்மான் கேட்ட தேர்தல் எல்லாம் தோல்விகண்டவையாகவே இருந்தது. அதனால்தான் நாம் இங்கு கட்சி ஆரம்பிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

பிணத்தில் அரசியல் செய்பவர்களே இங்கு இருக்கின்றார்கள். சிலர் மாவீரர் தினத்தை வைத்தே அரசியல் கட்சி நடாத்தி வருகின்றனர். இந்த மாவீரர் தினத்தை வைத்து சிலர் நிதி சேகரிக்கின்றனர். நாங்கள் முதலில் கிழக்கை காப்பாற்ற வேண்டும் அதற்காகவே நாம் இந்த கிரான் மண்ணிலேயே அலுவலகத்தையும் திறந்துள்ளோம்.

எமது அரசியல் கட்சி போராளிகளின் நலனை கருத்திற் கொண்டே ஆரம்பிக்கப்பட்டது. ஆயுதம் ஏந்தி இந்த மண்ணிற்காக போராடிய போராளிகளுக்காகவே நாம் தற்போது களத்தில் இறங்கியுள்ளோம்.

கிழக்கு மாகாணத்தின் எல்லை கிராமங்களில் 100 கணக்கான ஏக்கர் காணிகள் இழக்கப்பட்டுள்ளது. அதற்காக  நாம் போராட்டங்களை முன்னெடுப்போம் என்பதை கூறிக்கொள்கின்றோம் என்றார்.

Powered by Blogger.