இனப்படுகொலை செய்த மகிந்த ராஜபக்ஸ தலைமையிலானவர்களே அரசுக்கு எதிரான பேரணியை நடாத்தியுள்ளனர் - எஸ்.சிவயோகநாதன்!!
கிழக்கு மாகாண மக்கள் திட்ட வரைவு ஒன்றியத்தின் ஊடக சந்திப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்றது.
இதன் போது கிழக்கு மாகாண மக்கள் திட்ட வரைவு ஒன்றியத்தின் ஆலோசகர் எஸ்.சிவயோகநாதன் கருத்து தெரிவிக்கையிலேயே இனப்படுகொலை செய்த மகிந்த ராஜபக்ஸ தலைமையிலானவர்களே அரசுக்கு எதிரான பேரணியை நடாத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
அவர் இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஜனநாயக நாட்டில் ஆளும் கட்சி ஒன்று இருக்குமாக இருந்தால் எதிர்கட்சி பேரணி நடாத்துவதை ஜனநாயக செயற்பாடாகவே பார்க்க வேண்டும். ஆனால் இப்போது இருக்கும் ஆட்சியாளர்களை விட தற்போது பேரணி நடாத்தியவர்கள் யார் என்று பார்த்தால் மிகவும் சீரளிவான நாட்டைத்தான் விட்டுச் சென்றவர்கள், பொருளாதார ரீதியாக இருந்தாலும் சரி, இனப்படுகொலையாக இருந்தாலும் சரி பல விதமான அநீதிகளுக்கு சொந்தமானவர்களே மகிந்த ராஜபக்ஸ தலைமையிலானவர்கள், இவர்கள் தான் இந்த பேரணியை நடாத்தியுள்ளனர்.
மிகவும் ஒழுக்க சீர்கேடான வகையிலேயே இந்த பேரணி நடாத்தப்பட்டதை காண முடிந்தது. நடைபெறுகின்ற ஆட்சியை விட ஒரு நல்ல ஆட்சியை மாற்ற வேண்டுமானால் உங்களுடைய போராட்டம் நியாயமானதாக இருக்க வேண்டும், எல்லோரும் ஏற்றுக் கொள்ள கூடியதாக இருக்க வேண்டும், திருகோணமலை புத்தர் விடையமாக இருந்தாலும் சரி தொல்லியல் விடையங்களாக இருந்தாலும் சரி முன்னை ஆட்சியாளர்களின் கைங்கரியங்களாகவே இருக்கின்றதை உணர முடிகின்றது என்றார்.
இதன் போது கிழக்கு மாகாண மக்கள் திட்ட வரைவு ஒன்றியத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாரை மாவட்டங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும் கருத்து தெரிவித்தனர்.
