கடந்த 29.01.2025 அன்று சமூக வலைத்தளத்திலபதிவான குரல் பதிவு பற்றிய பொய்யான தகவல் ஒன்றை சரிவரி விசாரிக்காமல் பதிவிட்டமைக்கு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக கவலை வெளியிட்டுள்ளது.
இறந்த நோயாளியின் தகவலை சரிவர பெறாத நிலையிலும் இன்னொருவர் கூறியதை கேட்டும் விமர்சித்திருக்கின்றார். அவரது பதிவில் பித்தப்பை சத்திரசிகிச்சை செய்தவுடன் இறந்ததாகக் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், அந்த நோயாளி பித்தப்பை சத்திரசிகிச்சை செய்து குணமாகி வீடு சென்றமை குறிப்பிடத்தக்கது. அந் நோயாளி 07.01.2025 அன்று காய்ச்சல், வயிற்றோட்டம் காரணமாக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை பல வைத்திய நிபுணர்களின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் பின்னரே CT மூலம் குடல் புற்றுநோய் என்றும் அது வயிற்றினுள்ளே தீவிரமாகப் பரவப்பட்ட நிலையில் உடனடியாக சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என விளக்கம் கூறி சம்மதம் பெற்ற பின்னரே இச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. இச் சந்திரசிகிச்சையின் போது தொற்று தீவிரமாக பரவிய நிலையையும் நோயாளியின் தீவிர நிலைமையும் குடும்பத்தாரிடமும் கணவரிடமும் தெரியப்படுத்தப்பட்டது.
அதன் பின்னர் 26.01.2025 அன்று நோயாளியின் உயிர் குறிகள் குறைந்து செல்வதையிட்டு வைத்தியர் குழாம் அதி தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றியது. அதன் மறு நாளே நோயாளி முன்னேற்றமின்றி இறந்தார். இவரது மரணத்திற்கான தகவல் அனைத்தும் கணவரிடம் கூறி அவர் விளங்கிக்கொண்டதன் பின்னரே அவரது உடல் கையளிக்கப்பட்டது.
குடும்பத்தாரிற்கு இம் மரணம் பற்றி சந்தேகம் ஏற்பட்டு இருந்தால் அருகாமையிலுள்ள எமது வைத்தியசாலைக்கு நேரடியாகவோ அல்லது எழுத்து மூல முறைப்பாடு மூலமோ அறிவித்து இருந்திருக்கலாம். அல்லது இதன் மேலதிக விளக்கம் தேவையாயின் 0777393169 எனும் தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு அறியப் பெறலாம். இதை விடுத்து தினமும் 1000 ற்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு வைத்திய சேவையை வழங்கி வரும் எமது வைத்தியசாலையின் நற்பெயரிற்கு பங்கம் விளைவிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம்.
அத்துடன் சென்ற மாதம் ஆண் சத்திரசிகிச்சை விடுதியில் ஒரு நோயாளி இதே வைத்தியசாலையையும் அதே சத்திரசிகிச்சை நிபுணரையும் பாராட்டி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததையும் நினைவு கூருகின்றோம்.