நிலைமாறு கால நீதி தொடர்பில் அரச உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் செயலமர்வு!!

நிலைமாறு கால நீதி தொடர்பாக மாவட்ட மட்டத்தில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் செயலமர்வு இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது.

தேசிய சமாதானப் பேரவையினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் "நீதி மற்றும் பொறுப்புக் கூறலுக்கான மக்கள் ஒன்றிணைவு" எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் பூஜா திட்டத்தின் ஒரு அங்கமாக நிலைமாறுகால நீதி அரச அதிகாரிகளுக்கான மாவட்ட அளவிலான தகவல் அமர்வு இன்று (08) திகதி மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் இடம் பெற்றது.

தேசிய சமாதானப் பேரவையின்   ஏற்பாட்டில் மட்டக்களப்பு வண்ணாத்திப் பூச்சி சமாதான பூங்காவின் இணைப்பாளர் து.நகுலேஸ்வரனின் இணைப்பாக்கத்தில் இடம்பெற்ற குறித்த செயலமர்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.

தேசிய சமாதான பேரவையின் இணை முகாமையாளர் நாகரெட்ணம் விஜயகாந்தின் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் நாட்டின் சுதந்திரம், சிறுவர் உரிமைகள், பெண்களுக்கான உரிமைகள் மற்றும் உண்மையை கண்டறிதல் போன்ற விடையங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன், சிரேஸ்ட சட்டத்தரணியும், முன்னால் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருமான பேராசிரியர் தங்கமுத்து ஜெயசிங்கம் இதன் போது வளவாளராக வளவாண்மை மேற்கொண்டிருந்தார்.

குறித்த செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன், தேசிய சமாதான பேரவையின் கண்காணிப்பு மற்றும் மீளாய்வுக்கான தேசிய இணைப்பாளர் நிலக்ஷி தவராஜா, தேசிய சமாதான பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத  குழுவின் இணைப்பாளர் இ.மனோகரன், நிருவாக உத்தியோகத்தர்கள், தேசிய ஒருமைப்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் சட்டத்தரணிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.











Powered by Blogger.