"சிறுவர்களின் ஆரோக்கியமான வாழ்வை மேம்படுத்துவோம்" - மட்டக்களப்பில் அஞ்சல் ஓட்ட காணிவேல் 2024!!


"சிறுவர்களின் ஆரோக்கியமான வாழ்வை  மேம்படுத்துவோம்" எனும் தொனிப்பொருளில் அஞ்சல் ஓட்ட காணிவேல் 2024 நிகழ்வு மட்டக்களப்பில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட  மெய்வல்லுனர் சங்கத்தின் ஏற்பாட்டில் கழகத்தின் தலைவரும் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தருமான வீ.ஈஸ்பரன் தலைமையில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நேற்று (03) திகதி இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களில் இருந்து 18 பாடசாலைகளை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அஞ்சலோட்ட வீரர்கள் பங்குபற்றி தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

4x100 அஞ்சலோட்ட போட்டியானது பாடசாலை மாணவர்களுக்கிடையில் நான்கு பிரிவுகளாகவும், கழகங்களுக்கு இடையில் திறந்த மட்ட போட்டியாகவும்  இடம்பெற்றன. 

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  திருமதி.சுதர்ஷனி ஸ்ரீகாந்த் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கிவைத்துள்ளார்.

குறித்த நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் (உடற்கல்வி) வீ.லவகுமார், செரி நிறுவனத்தின் இலங்கைக்கான தேசிய இயக்குனர் தர்சன், கிழக்கு பல்கலைக்கழகத்தின் உதவி கல்விப் பணிப்பாளர் (உடற்கல்வி) திவாகர், சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் உடற்கல்வித்துறை போதனாசிரியர் திருமதி.மிருனாளினி உள்ளிட்டோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.

வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டதுடன், போட்டிகளில் பங்குபற்றிய அனைத்து போட்டியாளர்களுக்கும் இதன்போது அதிதிகளினால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட  மெய்வல்லுனர் சங்கத்தின் செயலாளர் ஏ.சிவகுமார் மற்றும் கழகத்தின் உபதலைவர்கள் உள்ளிட்ட கழக உறுப்பினர்கள் இந்நிகழ்வுகள் யாவற்றையும் மிகவும் திறம்பட நெறிப்படுத்தி நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




















கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
Powered by Blogger.