"தென்றல்" சஞ்சிகையின் 60 ஆவது இதழ் வெளியீடும், கலைஞர் கௌரவிப்பும்!


மட்டக்களப்பு கல்லடியிலிருந்து கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக வெளிவந்து சாதனை படைத்துக் கொண்டிருக்கும் "தென்றல்" சஞ்சிகையின் 60 ஆவது இதழ் வெளியீடும், 50 கலைஞர் கௌரவிப்பும்  (02) திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரியில் இடம்பெற்றது.

"தென்றல்" சஞ்சிகை ஆசிரியர் கதிரேசபிள்ளை கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் பிரதம அதிதியாகவும், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது "தென்றல்" சஞ்சிகையின் 60 ஆவது மலரின் முதல் பிரதியினை மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவரும் சமூக சேவையாளருமாகிய விநாயகமூர்த்தி றஞ்சிதமூர்த்தி நூலாசிரியரின் கரங்களில் இருந்து பெற்றுக்கொண்டுள்ளார்.

60 ஆவது மலர் தொடர்பான அறிமுகவுரையினை "தென்றல்" சஞ்சிகையின் ஆசிரியர்பீட உறுப்பினர் இ.கோபாலபிள்ளை நிகழ்த்தியிருந்தார்.

இதன்போது நாடளாவிய ரீதியாகத் "தென்றல்" சஞ்சிகையின் வளர்ச்சிக்குத் தமது பங்களிப்பினை வழங்கிக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள், ஓவியர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் என 50 பேர் "வீசுதென்றல் விருது" மற்றும் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் மங்கள விளக்கேற்றப்பட்டு, "தென்றல்" கொடியேற்றப்பட்டதனைத் தொடர்ந்து "தென்றல்" கீதம் இசைத்தலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

மாணவர்களது கண்கவர் நடனங்கள் இதன்போது அரங்கை அலங்கரித்ததுடன், அதிதிகளின் உரைகளில் 16 வருடங்களை தொட்டுள்ள "தென்றல்" சஞ்சிகையினையும் அதன் ஆசிரியரையும் அனைவரும் பாராட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர், மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர், மூத்த கலைஞர்கள், சஞ்சிகை ஆசிரியரின் உறவினர்கள், அனுசரனையாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.



































Powered by Blogger.