மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையினை அவிருத்தி செய்வது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் (21) திகதி இடம் பெற்றுள்ளது.
மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையை ஈர்க்கும் வண்ணம் பிரதேச மட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் இடம் பெற்றதுடன், இதன்போது சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் எச்.எம்.பி.வி.ஹேரத், சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் மேலதிக செயலாளர் (நிருவாகம்) ரி.எம். ஜே.டபிள்யூ.தென்னக்கோன், அமைச்சின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) என்.எஸ். நஸிர், ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்கு எதுவான பிரதேசங்கள் தொடர்பாக இவர்கள் அறிந்துகொள்ளும் வண்ணம் மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதீஸ்குமாரினால் முன்னளிக்கை செய்யப்பட்டது.
காயங்கேணி பிரதேசத்தை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்வதற்கான முன்மொழிவுகளும், ஒல்லாந்தர் கோட்டையை சுற்றுலா தளமாக அபிவிருத்தி செய்தல், பாசிக்குடாவில் பொதுமக்களிற்கான பொழுதுபோக்கிற்காக ஒதுக்கப்பட இடங்களில் வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பாக இதன்போது முன்னுரிமையடிப்படையில் ஆலோசிக்கப்பட்டது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் சுற்றுலா பயணிகளை கவர்வதற்கு முருங்கைக்கற்கல், முருங்கள் பாறைகளை பார்வையிடுவதற்கு தேவையான உபகரண வசதிகளை பெற்றுத்தருவதாக அதிகாரிகள் இதன்போது கருத்து தெரிவித்தனர்.
இதன் போது மேலதிகமாக அடையாளம் காணப்பட்ட சுற்றுலா பிரதேசங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன், பாசிக்குடா சுற்றுலா வலயத்தில் முறையற்ற விதத்தில் கழிவுநீர் தோணாவில் கலப்பதனால் ஏற்படும் அசௌகரியத்தை தடுப்பதற்கு கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் தொடர்பாக தவிசாளரினால் எடுத்துரைக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலைத் தொடர்ந்து அதிதிகள் மாந்தீவு, காயங்கேணி மற்றும் பாசிக்குடா பிரதேசத்திற்கு களவிஜய ஆய்வினை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சுற்றுலாத்துறை அமைச்சினால் தயாரிக்கப்படுகின்ற தேசிய முலோபால திட்டத்தில் மாவட்டத்தின் பெறுமதிவாய்ந்த சுற்றுலா நிகழ்ச்சி திட்டங்களை உள்வாங்குவதற்கு ஆவனை செய்வதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியக தவிசாளர் பி.மதனவாசன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, மட்டக்களப்பு மாவட்ட சுற்றுலா அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் நிரோசன், திணைக்கள தலைவர்கள், சுற்றுலா துறை சார்ந்தவர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.