மட்டக்களப்பு நகரில் தொடர்ந்து அதிகரித்து வரும் வீதி விபத்துகள், போக்குவரத்து நெரிசல் மற்றும் நடைபாதை தடைகள் மக்கள் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் பாதித்து வந்தது. பொது மக்களின் இக்கட்டான நிலையை உணர்ந்த மட்டக்களப்பு மாநகர சபை, நகரின் ஒழுங்கையும் மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் வீதியோர வியாபாரங்களைத் தடை செய்வதற்கான தீர்மானத்தை மட்டக்களப்பு மாநகர சபை எடுத்துள்ளது.
இந்தத் தீர்மானம் நடைமுறையில் பலனளிக்க, மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் அவர்கள் நேரடியாக களம் இறங்கி, நகரின் முக்கிய வீதிகள், சந்தைகள் மற்றும் பொது மக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதிகளில் கண்காணிப்புகளை முன்னெடுத்தார். வியாபாரிகள் சட்டவிரோதமாக நடைபாதைகள், சாலையோரங்கள் மற்றும் போக்குவரத்து முக்கியப் பகுதிகளைப் பயன்படுத்துவதால் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் சிரமங்களை அவர் நேரடியாகக் கண்டு, அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு வீதியோர வியாபாரம் தடைசெய்யப்பட்டது.
முதல்வரின் இந்த செயற்பாடு மூலம், நடைபாதைகள் சுத்தமாகவும் சீராகவும் பயன்படுத்தும் சூழல் உருவாக்கப்பட்டதுடன், போக்குவரத்து நெரிசல் குறைக்கும் நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளது,
பொதுமக்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் சுகாதாரம் முன்னிறுத்தப்பட்டது, நகரின் ஒழுங்கும் அழகியலும் பேணப்படும் நிலை உருவாக்கப்பட்டது.
மாநகர சபையின் இந்த முயற்சிகளில் மக்கள் ஒத்துழைப்பும், வியாபாரிகளுக்கு மாற்று இடங்கள் வழங்கும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நகரின் சட்டம், ஒழுங்கு மற்றும் மக்களின் நலனுக்காக, முதல்வர் சிவம் பாக்கியநாதன் அவர்கள் எடுத்திருக்கும் இந் நடவடிக்கை நகர அபிவிருத்தியில் முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.
