இளம் வயதில் பாக்கு நீரினை நீந்திக் கடந்த மதுஷிகனுக்கு 231 வது படைப்பிரிவினால் கௌரவம்!!


இளம் வயதில் பாக்கு நீரினை நீந்திக் கடந்த மதுஷிகனுக்கு 231 வது இராணுவ படைப்பிரிவினால் இன்று மட்டக்களப்பில்  கௌரவமளிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவரும் ஜனாதிபதி விருது பெற்ற சிரேஷ்ட சாரணருமான தவேந்திரன் மதுஷிகன் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்தமையினை முன்னிட்டு 231 வது இராணுவ படைப்பிரிவினால் இன்று (04) திகதி மட்டக்களப்பில் கௌரவமளிக்கப்பட்டுள்ளது.

231 வது படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர் திலீப பண்டார தலைமையில் 231 வது இராணுவ படைப்பிரிவின் கல்லடி இராணுவ முகாமில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான, மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமார், மட்டக்களப்பு புதிய நூற்றாண்டு MJF லயன்ஸ் கழகத்தின்  தலைவர் லயன் நமசிவாயம் புஸ்பாகரன், புதிய நூற்றாண்டு MJF லயன்ஸ் கழகத்தின்  புதிய தலைவர் லயன் எம்.சுதாகரன், புனித மிக்கேல் கல்லூரியின் அதிபர், மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர் வீ.பிரதீபன், மதுஷிகனின் பெற்றோர்,  மாவட்ட ஊடக பொறுப்பதிகாரி வ.ஜீவானந்தன், இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட சாரண ஆசிரியர்கள், சாரண மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து பாக்கு நீரிணையைக் நீந்தி இலங்கையின் தலைமன்னாரை வந்தடைந்துடன் பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்திய சாதனையாளரான மதுஷிகன் பாராட்டப்பட்டதுடன் 231 படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் இணைந்து நினைவுச்சின்னமொன்றினை வழங்கி கௌரவமளித்துள்ளனர்.

அத்தோடு குறித்த மாணவனின் சாதனையினை பாராட்டி மட்டக்களப்பு புதிய நூற்றாண்டு MJF லயன்ஸ் கழகத்தின் உருவாக்கல் தலைவர் நமசிவாயம் புஸ்பாகரனினால் பணப்பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், இவர் தனது சாதனை நீச்சல் பயணத்தில் 30 கிலோ மீற்றர்  தூரமுடைய பாக்கு நீரிணையை சுமார் 12 மணித்தியாலம் 58 நிமிடங்களில் நீந்திக் கரை சேர்ந்ததுடன், இவர் இதுவரை நீச்சல் திறமைக்காக 12 பதக்கங்களை வென்றெடுத்துள்ளதுடன், கல்வி பொதுத் தராதர உயர் தரத்தில் கணித துறையில் தமது பாடசாலைக் கல்வியை கற்றதுடன் இலங்கை சாரணியப் படையில் இணைந்து தமது ஆற்றல்களை வெளிப்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.











Powered by Blogger.