குவியம் ஊடகத்தினால் நடாத்தப்பட்ட குறும்படப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
உயிரைக்கொல்லும் போதைப்பொருள் எனும் தலைப்பில் Kuviyam ஊடகத்தினால் நடாத்தப்பட்ட குறும்படப் போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களைப் பிடித்த குறும்படங்களுக்கு முறையே 50,000/-, 30,000/-, 20,000/- பணப்பரிசில்களும், கேடயங்களும் வழங்கப்பட்டன. அத்துடன் முதல் 10 இடங்களைப் பிடித்த குறும்படங்களின் இயக்குநர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
குவியம் ஊடகத்தின் பணிப்பாளர் கனகநாயகம் வரோதயன் தலைமையில் யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமனற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், செல்லிடப்பேசிகள் (mobile smartphone) மூலமாக இக்குறும்படங்களைத் தயாரிக்கக் கோரியதன் மூலம் அதிகளவான இளையோர்களை இத்துறைக்குள் இழுப்பதுமே இதன் நோக்கமாகும் என வரோதயன் குறிப்பிட்டார்.
போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வை வீதியோரங்களில் செய்யும் போது அவை ஒருசில முதியோர்களை மட்டுமே சென்றடையுமெனவும், ஆனால் இவ்வாறான குறும்படப் போட்டி மூலம் சரியான இலக்குக் குழுக்களான இளையோரைச் சென்றடைவதாகவும் அதில் குவியம் ஊடகம் வெற்றி பெற்றுள்ளதெனவும் சுமந்திரன் தெரிவித்தார்.
இக்குறும்படப் போட்டியில் முதலாம் இடத்தைக் கவிவர்மனின் “யாவரும் கேளீர்“ இரண்டாம் இடத்தினை கெனிஸ்டன் ஜோனின் “30 செக்கன்ஸ்”, மூன்றாம் இடத்யினை கோடீஸ்வரனின் “வசம்” ஆகிய குறும்படங்கள் பெற்றன.
சிறந்த 10 படங்களாக விவிக்தனின் "உயிரைக்கொல்லும் போதை வேண்டாம்", அஜந்தன் உதயகுமாரின்
"போதை கணமே", சந்திரகுமார் கோபிகனின் "போதையின் கூலி" அர்ஷிக்கா ராஜேஸ்வரனின் "கனா நீ" ,
சங்கீர்த்தனா அருளானந்தாவின் "மெய்யறியாமை கொளல்", RJ Benaya வின் "மௌட்டியம் கொல்", அரவின் ரமணனின் "பந்தயம்" ஆகிய குறும்படங்கள் தெரிவு செய்யப்பட்டன.
அத்துடன் சிறந்த நடிகர், நடிகை, ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், குழந்தை நட்சத்திரம், இயக்குநர் எனத் தனிப்பட்ட திறமைகளுக்கான பதக்கங்களும் வழங்கப்பட்டன.
இக்குறும்படப் போட்டிக்கு பிரதான அனுசரணையை துளி நற்பணி மன்றம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.