கம்பெரலிய திட்டத்திற்கு வந்த நிதியை தனது விளம்பரத்திற்கு செலவு செய்த மட்டக்களப்பு அரசியல்வாதி
கடந்த காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் முகம் பொறிக்கப்பட்ட விளம்பரப் பலகை இடுவதற்கு கம்பெரலிய திட்டத்திற்கு வந்த நிதியில் இருந்து பதினெட்டு இலட்சம் ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலக அபிவிருத்திக் குழு கூட்டம், இன்றையதினம் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


தொடர்ந்தும் தெரிவிக்கையில்,


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 345 கிராம சேவகர் பிரிவுகளுக்கு, முதல் கட்டமாக 69 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவிலுள்ள கிராமங்களுக்கு இரண்டு கோடியே நாற்பது இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவிலுள்ள கிராம மக்களுக்கு உச்ச பயனை பெறக்கூடிய வகையில் நிதி பயன்படுத்தப்பட வேண்டும். நிறைவானதோர் கிராமம் என்ற வேலைத்திட்டத்தில் ஒரு கிராம சேவகர் பிரிவிற்கு இரண்டு இலட்சம் ரூபா என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


கடந்த காலங்களில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சில திட்டங்களில் மக்கள் முழுமையான பயனை பெற்றார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.


கம்பெரலிய திட்டத்தின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் விளம்பரத்திற்கு பதினெட்டு இலட்சம் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.


அரசியல்வாதிகளின் முகம் பொறிக்கப்பட்ட விளம்பரப் பலகை இடுவதற்கு இந்த திட்டத்திற்கு வந்த நிதி செலவிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்Powered by Blogger.