அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை!



ஒழுக்க விதிகளுக்கு அமைய செயற்படாதோர் மற்றும் இலஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபடும் எந்தவொரு அரச ஊழியருக்கும் தராதரம் பாராது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,


நிக்கவெரட்டிய பிரதேசத்தில் சிறுமி மீது மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட கிராம உத்தியோகத்தருக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.


இது தொடர்பாக அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாரச்சி தெரிவிக்கையில்,




இந்தச் சம்பவத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும், குறித்த சம்பவம் தொடர்பான தகவலைக் கேள்வியுற்றதும் குருநாகல் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அது தொடர்பாக அறிவித்து ஒழுக்காற்று நடவடிக்கையை உடன் முன்னெடுக்குமாறு தான் ஆலோசனை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.


இதற்கு மேலதிகமாக அமைச்சின் சிரேஷ்ட உதவிச்செயலாளர் ஒருவர் இது குறித்தவிசாரணை நடத்துவதற்கு அந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.


பொலிஸ் விசாரணைகளுக்கு மேலதிகமாக இவர் இந்த விசாரணையை மேற்கொள்வார். கிராம உத்தியோகத்தர் தமது சேவையை பொதுமக்களின் சேமநலனுக்காக பயன்படுத்த வேண்டுமே தவிர அவர்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் வகையில் எந்த வகையிலும் தமது பதவியை பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய கிராம உத்தியோகத்தரின் கடமைகள் குறித்து எதிர்காலத்தில் கவனம் செலுத்தப்படும் என்றும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். சிலரின் செயற்பாடுகள் காரணமாக ஒட்டுமொத்த அரசாங்க ஊழியர்களுக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.



Powered by Blogger.