வீதியால் செல்லவே பயமாக உள்ளது நடுங்கும் ரிசாட்ஸ்ரீலங்காவில் புதிய அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறி ஒரு வார காலத்திற்குள் கட்சியொன்றின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கூட வீதியால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.


புத்தளம் பகுதியில் வைத்து தமது வாகனத் தொடரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.


இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,


புத்தளம் - முந்தல் பகுதியில் உள்ள ஆதரவாளர்களை சந்திப்பதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னாள் அமைச்சர் றிசாட் உள்ளிட்ட சிலர் வாகன தொடரணியாக பயணித்துள்ளனர்.


மக்கள் சந்திப்பொன்றை நடத்திவிட்டு மீண்டும் வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில் முன்னாள் அமைச்சரின் வாகனத் தொடரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


இந்த தாக்குதல் சம்பவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.


சம்பவ இடத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு வாகனங்களுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள ரிஷாட் பதியுதீன்,


வீதியில் செல்ல முடியாத அளவு கடும் மோசமான அரசாங்கமொன்றே தற்போது ஆட்சிக்கு வந்துள்ளதாகவும் விசனம் வெளியிட்டார்.


நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தரப்பினர் முந்தல் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக முந்தல் பொலிஸார் குறிப்பிட்டனர்.


எனினும் இதுவரை இந்த தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்படவில்லை என முந்தல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இந்த சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில், தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முந்தல் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.Powered by Blogger.