மஹிந்த மைத்திரி கூட்டணி நாளை இறுதி முடிவு






ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான கூட்டணிப் பேச்சுக்கு இடையூறாக காணப்படுகின்ற சின்னம் தொடர்பான பிரச்சினைக்கு நாளை அல்லது நாளை மறுதினம் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரான வீரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், மொட்டுச் சின்னத்தை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மாற்றியமைத்தால் தான் கூட்டணிப் பேச்சுக்களை தொடர்ந்தும் முன்னெடுத்து வெற்றியைக் காணமுடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,


“விசேடமாக சின்னம் குறித்து பிரச்சினை உருவாகியுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு நாளை அல்லது நாளை மறுதினம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிடும் என்று நம்புகின்றோம். அப்படியொரு நம்பிக்கையில்தான் சுதந்திரக் கட்சி இருக்கிறது.


பொதுச் சின்னத்தை நாங்கள் கோருகின்றோம். சுதந்திரக் கட்சியிலுள்ள பொதுச் சக்திகளும், பல்வேறு அமைப்புக்களும் ஒரு பொதுவான சின்னத்தின் கீழ் ஆதரவளிப்பதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளனர். தேசிய மட்டத்திலான வேலைத்திட்டத்தின்படி சின்னம் மிக முக்கியமானதாகும்.


கோத்தபாய ராஜபக்சவின் வெற்றியின் கீழ் அரசியல் நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்துவதற்கும் அந்த தேசிய சக்திகள் எதிர்பார்க்கின்றன. ஆகவே பொதுவான ஒரு சின்னத்திற்கு அனைவரும் யோசனை முன்வைத்துள்ளனர். இந்த யோசனையை நிராகரித்துச்செல்ல முடியாது.


இந்த அரசாங்கம் ஆரம்பத்திலிருந்து முன்னெடுத்த செயற்பாடுகளை தோற்கடிக்க வேண்டும் என்றால், அனைத்து அரசியல் சக்திகள், அனைத்து இனத்தவர்கள், மதத்தவர்கள் அனைவரும் ஓரிடத்தில் இணைவதற்காக அவசியமிருந்தால் இதயசுத்தியுடன் செயற்படுவது முக்கியதாகும்.


ஆரம்பத்திலேயே குழப்பநிலை இருந்தால் இறுதியும் குழப்பமாகவே அமையும். ஆகவே அனைவரும் அனைவருடைய சிந்தனை, யோசனைக்கும் செவிகொடுப்பதாயின் அதனூடாக நாங்கள் முன்நகர்ந்து செல்ல முடியும்.


இந்த அனைத்து விடயங்களையும் முதற்தரப்படுத்தியே இதனை முன்வைக்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Powered by Blogger.