ஸஹ்ரான் தமிழில் பயங்கரவாத பிரசாரங்கள் செய்ததால் அவர் இலங்கைக்கு மட்டுமல்ல தென்னிந்தியாவுக்கும் பாரிய அச்சுறுத்தல் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவுக்குழு முன்னிலையில் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார்.அவர் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவிக்கையில்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற நிலையில் அதிலிருந்து அரசாங்கம் தப்பிக்க முடியாது. அரசாங்கம் இதில் பொறுப்பேற்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடு. அதுமட்டுமல்ல இந்தத் தாக்குதலில் ஸஹ்ரான் குழுவினர் கொல்லப்பட்டாலும் கூட வேறு நபர்கள் உருவாகலாம்.
ஒரு குழு அழிக்கப்பட்ட காரணத்தினால் பிரச்சினை முடிந்ததாக கூற முடியாது. இது புற்றுநோய் போன்றது. ஒரு குழு முடிந்துவிட்டது என திருப்திகொள்ள முடியாது. வேறு யார் உள்ளனர் என்பதை கண்டறிய வேண்டும். யாரின் கொள்கை உருவாகின்றது. ஆயுதம் என்பது துப்பாக்கி மட்டும் அல்ல வேறு எதனையும் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்