மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கத்தின் கொலைக்கு நீதி கோரி மட்டக்களப்பில் இடம்பெற்ற கவனயீர்ப்பு பேரணியும், நினைவஞ்சலி நிகழ்வும்!!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அமரர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் 20வது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் இன்று (25) திகதி இடம் பெற்றது.

மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்கள் கடந்த 2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் திகதி நள்ளிரவு மட்டக்களப்பில் உள்ள புனித மரியாள் பேராலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்துகொண்டு ஆயரிடம் நற்கருணை பெற்று திரும்பிய போது துப்பாக்கிதாரிகளால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். 

அவர் படுகொலை செய்யப்பட்ட டிசம்பர் 25ம் திகதியில் ஒவ்வொரு ஆண்டும் இலங்கை தமிழரசுக்கட்சியினால் நினைவு தினம் அனுஷ்டித்தல் நடைபெற்றுவருகின்றது.

இந்த வருடமும் மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் நினைவஞ்சலி நிகழ்வு இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் அவர்கள் "இலங்கை வரலாற்று பின்னணியில் சமஷ்டி தீர்வினை பெறுதல்" எனும் தலைப்பில் இதன் போது பேருரையாற்றியதுடன், குறித்த நிகழ்வின் போது  மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களது திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஈகைச் சுடர் ஏற்றப்பட்டதுடன், இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வுகளின் ஆரம்பத்தில் காந்தி பூங்கா முன்பாகவிருந்து மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதி கோரி, நினைவஞ்சலி இடம் பெற்ற மட்டக்களப்பு மாநகர சபை வளாகம் வரை கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டதுடன், குறித்த நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், வைத்தியர் இளையதம்பி ஶ்ரீநாத், மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் சிவம் பாக்கியநாதன் உள்ளிட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பா.அரியநேந்திரன், முன்னால் மாகாண சபை உறுப்பினர்கள், கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், வாலிபர் முன்ணனி பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியதுடன், கவனயீர்ப்பு பேரணியிலும் பங்கேற்றிருந்தனர்.


















Powered by Blogger.