அஸ்கிரியபீடம் எதிர்க்கட்சியினருக்கே ஆதரவு! முன்னாள் ஆளுநர் பகிரங்க குற்றச்சாட்டு



பௌத்த மக்களின் பெருந்தலைமைத்துவங்களில் ஒன்றான அஸ்கிரியபீடமானது எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத்சாலி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.







முஸ்லிம் மக்களை கல்லெறிந்து கொலைசெய்ய வேண்டும் என்று அஸ்கிரியப்பீட மகாநாயக்க தேரர் வறக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர் அண்மையில் வெளியிட்ட கருத்தால் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களும் அதிர்ச்சியடைந்திருப்பதாகவும் அசாத் சாலி கூறியுள்ளார்.


சிறிலங்காவின் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மயந்த திஸாநாயக்க தலைமையில் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அண்மையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொட சிறி ஞானரத்தன தேரர் வெளியிட்டிருந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


சிங்கள பௌத்த மக்களையே தான் பிரதிநிதித்துவப்படுத்துவதாக பகிரங்கமாக அறிவித்திருக்கும் சிறிலங்காவில் வாழும் சிங்கள பௌத்த மக்களின் பிரதான மதத் தலைமை பீடத்தின் மகாநாயக்கர் வறக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர், முஸ்லிம் மக்களுக்கு எதிராக குரோதத்தை தூண்டும் வகையில் பகிரங்கமாக உபதேசமும் செய்திருந்தார்.


முஸ்லிம்களின் வியாபாரங்கள் பகிஸ்கரிக்குமாறு சிங்கள பௌத்த மக்களை வலியுறுத்திக்கேட்டுக்கொண்டுள்ள அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொட சிறி ஞானரத்தன தேரர், முஸ்லிம் சமூகம் சிங்கள பௌத்த மக்கள் தொடர்பில் விருப்பம் கொண்டவர்கள் அல்ல என்றும் கல்லெறிந்து கொலைசெய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றார்.


முஸ்லிம் மக்களுக்கு எதிரான மகாநாயக்க தேரரின் இந்தக் கருத்து குறித்து கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத்சாலி, மகாநாயக்க தேரரின் இந்தக் கருத்தினால் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களும் அதிர்ச்சியடைந்திருப்பதாக தெரிவித்தார்.


இது குறித்து அசாத்சாலி குறிப்பிடுகையில், அஸ்கிரியப்பீட மகாநாயக்க தேரர் ஒரு நிகழ்வொன்றின்போது, சமல் ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவிருப்பதை கேள்விப்பட்டதாகவும், மயந்த திஸாநாயக்கவை அவர்களுடன் இணையுமாறு கோருவதாகவும் கூறியிருந்தார்.


அத்தோடு முஸ்லிம் மக்களை கல்லெறிந்து கொலை செய்ய வேண்டும் என்றும், முஸ்லிம்களின் கடைகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருப்பது குறித்து ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த நாட்டின் வரலாற்றில் முதற்தடவையாக அஸ்கிரியபீட மகாநாயக்க தேரர் ஒருவர் இப்படியான அறிவிப்பை விடுத்திருப்பதையிட்டு கவலையடைகிறோம்.


உயிர்த்த ஞாயிறு தினச் சம்பவத்திற்குப் பின்னால் மிகப்பெரிய சக்தியொன்று இருப்பதாக பலரும் கூறுகின்றனர். கர்தினால் ஆண்டகையும் கருத்து வெளியிட்டிருந்தார். தாஜ் சமுத்ரா விடுதியில் ஏன் குண்டு வெடிக்கவில்லை, அங்கே இருந்த பிரமுகர்கள் யார் என்று தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பியிருந்தார்.


இதனை ஆராய்வது அரசாங்கத்தின் கடமை. அரசாங்கம் இருக்கிறதா? ஜனாதிபதி இருக்கின்றாரா என்பது சந்தேகம். அனைத்து தீவிரவாதிகள், இனவாதிகளையும் கைது செய்ய முஸ்லிம்கள் பலவழியிலும் ஒத்துழைத்திருக்கிறார்கள். 13 சடலங்களே கொழும்புக்கு வந்தன. தொடர்ந்து 30 வருடப் போர் ஏற்பட்டது.


இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு என்பதை அனைவரும் அறிவார்கள்”


இதேவேளை இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத்சாலி, அஸ்கிரியப்பீட மகாநாயக்க தேரர் அரசியலில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டினார்.


இதனிடையே பலர் அரசியல் இலாபத்தைப் பெற முயற்சிப்பதை சிங்கள மக்கள் அறிவார்கள். நாங்கள் அஸ்கிரியபீட மகாநாயக்க தேரர் இப்படியொரு நிலைக்கு வீழ்வார் என்பதை எதிர்பார்க்கவில்லை. எமது இன்னொரு கவலைதான், மங்கள சமரவீர தவிர்ந்த வேறு அரச தரப்பு, ஜனாதிபதி, அமைச்சர்கள் எவரும் மகாநாயக்க தேரரின் கூற்று பிழையென்று கூறவில்லை. இதில் உண்மை, பொய் ஆராய்ந்து பார்த்துதான் மகாநாயக்க தேரர் கருத்து வெளியிட்டிருக்க வேண்டும்.


இது அரசியல் செயற்பாடு. மகாநாயக்க தேரர்கள் அரசியலில் இதுவரை ஈடுபட்டிருக்கவில்லை. உள்ளக ரீதியில் ஆதரவளித்திருக்கலாம். ஆனால் முன்னால் வந்து இவருக்கு வாக்களிக்கும்படி யாரும் கேட்கவில்லை. இருந்த போதிலும் அஸ்கிரியபீடம் முழுமையாக வந்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு வாக்களிக்கும்படி கோருகின்றது. பாரதூரமான பிரச்சினையான இதனை பௌத்த மக்கள் எப்படி பார்ப்பார்கள் என்று தெரியவில்லை”என்றார்


Powered by Blogger.