கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதிகளில் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதிகள், ஏன் மற்றொரு பிரபல நட்சத்திர விடுதியான தாஜ் சமுத்திராவை குறிவைக்கவில்லை என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர கேள்வியெழுப்பியுள்ளார்.
தென்னிலங்கையிலிருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே தயாசிறி மேற்கண்டவாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் தற்கொலைதாரிகள் குறிவைக்காத அந்த ஹோட்டலில் குழு ஒன்று இருந்ததாகவும், அவர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? என்றும் கேள்வியெழுப்பியுள்ள அவர், அங்கிருந்தவர்கள் யாரென அறிந்தால் சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களை இலகுவாக கண்டறியலாம் எனவும் கூறியுள்ளார்.
அத்துடன் ஊடகவியலாளர்கள் எல்லாவற்றையும் அறிய முற்படுவதுபோன்று இதனையும் அறிய முற்படவேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் மூன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளடங்கலாக 9 பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 258பேர் பலியானதுடன் 500க்கும் அதிகமானோர் காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.
இதுகுறித்த புலன் விசாரணைகள் நடைபெற்றுவரும் நிலையில் குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய புள்ளிகள் யார் என்பதை புலனாய்வுத்துறை துருவித் துருவி ஆராய்ந்துவருகிறது.
மேலும் அதுகுறித்த சாட்சியங்களப் பதிவுசெய்யுமுகமாக நாடாளுமன்ற தெரிவுக்குழுவும் தனது விசாரணைகளை முன்னெடுத்துவருகிறது.
இந்த நிலையில் இலங்கையில் முக்கிய அமைச்சுப் பொறுப்பில் இருந்தவரும் முக்கியமான தேசியக் கட்சி ஒன்றின் பொதுச் செயலாளருமாக இருந்தவருமான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கூறியுள்ள கருத்துக்கள் தென்னிலங்கையில் ஒருவித அதிர்வை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்ற னடத்திரக் கோட்டல்களுக்கு மிக அருகிலேயே தாஜ் நட்சத்திர விடுதியும் உள்ளதனால் தீவிரவாதிகள் ஏன் அங்கு வெடிப்பு ஏற்படுவதை தவிர்த்தார்கள் என்றும் அங்கு அப்போது யார் யார் இருந்தார்கள் என்ற விபரத்தினையும் பெற்றால் உண்மைகள் புலனாகும் என தயாசிறி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.