ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்தவர்களை தெரிந்திருந்தும் நாம் கைது செய்யவில்லை - ரணிலின் சர்ச்சைப் பேச்சு


ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்த இலங்கையர்களை தெரிந்தும் அவர்களை கைது செய்யவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத அமைப்பில் இணைந்த இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்பியுள்ளனர்.

வெளிநாட்டு தீவிரவாத அமைப்பில் இணைவது உள்நாட்டு சட்டங்களுக்கு முரணானதாகக் காணப்படாமையால் அவர்கள் கைது செய்யப்படவில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது பிரதமர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த சிலர் சிரியாவிற்கு சென்றதை நாங்கள் அறிந்திருந்தோம். எனினும் எமது நாட்டுச் சட்டங்களின்படி அவ்வாறு வெளிநாடொன்றுக்குச் செல்வதோ, மீண்டும் நாடு திரும்புவதோ அல்லது வெளிநாட்டு கடும்போக்கு அமைப்பொன்றில் செயற்படுவதோ குற்றமாகக் கருதப்படவில்லை.


வெளிநாட்டு தீவிரவாத அமைப்புக்களின் இணைந்து கொள்பவர்களை கைது செய்வதற்கு ஏதுவான சட்ட ஏற்பாடுகள் எமது நாட்டில் இல்லை. மாறாக இலங்கைக்குள் செயற்படுகின்ற தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்களின் மீது நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான சட்டங்களே இங்கு காணப்படுகின்றன என்று அவர் கூறியிருக்கிறார்.

இலங்கையைப் பொறுத்தவரை சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் பயங்கரவாதத் தடைச்சட்டம் கடந்த 1978 ஆம் ஆண்டிலிருந்து அமுலில் இருக்கின்றது.


இந்த சட்டத்தின் ஊடாக தேசிய பாதுகாப்பிற்கு முரணனான, சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை பிடியாணை இன்றி கைது செய்வதற்கும், அவர்களை எந்தவொரு உத்தியோகபூர்வ நிலையங்களிலும் முன்னிறுத்தாமல் 18 மாதங்கள் வரை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கும் வாய்ப்புள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடந்த ஆண்டு வெளியிட்ட தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறது.


கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐ.எஸ் பயங்கரவாதிகளால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல் காரணமாக 253 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதில் 6 பயங்கரவாதிகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.Powered by Blogger.