ஏன் கட்சி மாறினேன் - வியாளேந்திரன்கிழக்குத் தமிழர்களின் இருப்புக்கும், அரசியல் ரீதியான அபிலாஷையுடன் கூடிய எண்ணத்துடன், தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கும்தான் நான் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றுள்ளேன் என, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கிழக்குப் பிராந்திய அபிவிருத்திப் பிரதியமைச்சருமான எஸ்.வியாளேந்திரன் (அமல்) தெரிவித்தார்.கிழக்குப் பிராந்திய அபிவிருத்திப் பிரதியமைச்சராக பதவியை பொறுப்பேற்றமை குறித்து, இன்று (3) அவரை தொடர்புகொண்டு கேட்டபோதே, அவரை இவ்வாறு குறிப்பிட்டார்.


அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “நான் கிழக்குத் தமிழர்களின் நிலைப்பாட்டையும், கிழக்குத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கும், தமிழர்களுக்குத் தார்மீக நோக்கத்துடன் நல்லது செய்யவேண்டும்.


“தமிழ் மக்கள்மீது வைத்துள்ள தூரநோக்குடைய சிந்தனையின் அடிப்படையில்தான், நான் நாடாளுமன்றப் பதவியை வைத்துக்கொண்டு அமைச்சுப் பதவியை ஏற்றுள்ளேன்.


“மாறாக கதிரையை சுடாக்கி வைப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது” என்றார்.


“இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தில் தெளிவான சூழ்நிலையில் தமிழர்களை பல்வேறுபட்ட விடயங்களில் தீர்வுபெற்றுக்கொடுப்பதற்கும், அமைச்சுப்பதவியை பாரமெடுத்துள்ளேன்.


“பலர், இதைத் துரோகம் என்கிறார்களே. நான் எப்படி தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்துள்ளேன். தமிழரின் காணிகள் ஏனைய சமூகத்தால் வலுக்கட்டாயமாக பிடிக்கப்படும் போது, தன்னம்தனியாக குரல் கொடுத்தேன். அப்போது இருந்த ஏனைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  உறுப்பினர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?


“இன்று வரை மட்டக்களப்பில் காணி பிடிக்கப்பட்டுக்கொண்டே கொண்டிருக்கின்றது. தமிழர்களின் காணிகளை யார் தடுப்பார்? காரணம் தமிழர்கள் மத்தியில் சாணாக்கியமுள்ள அரசியல் பலமில்லை.


“புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை வலுக்கட்டாயமாக அரசியல் பலத்தின்மூலம் அமைத்த போது, தனியாக நின்று, நானே எதிர்த்தேன். அப்போது ஏனையவர்கள் எங்கே போனார்கள்? கிழக்கில் இருந்தவர்கள் ஏன் இவ்விடயத்தில் மெளனமானர்கள்?


“எதிர்கட்சித் தலைவருக்கு இல்லாத அதிகாரமா? ஏன் மெளனம் காத்தார்கள்? ஒரு சத்தமிட்டாலே, நாடாளுமன்றம் கேட்கும் என்றால் ஏன் கேட்கவில்லை? மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் நன்மைக்காகவும், இருப்புக்காகவும் ஜனாதிபதியிடம் தனியாகவும், எதிராகவும், நான்தான் மகஜர் கொடுத்தேன்.


“இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு புலப்படாது. எனவே, கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ்மக்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் நிதானமாக சிந்தித்து செயற்படவேண்டும்.


“வரும் அரசாங்கத்தை எதிர்ப்பார்கள். ஆனால், வரவு – செலவுத் திட்டம், நம்பிக்கையில்லாப் பிரேரனைக்கு ஆதரவு கொடுப்பார்கள். இது தமிழ்மக்களுக்குச் செய்யும் துரோகமில்லையா?


“நான், அமைச்சு பதவி எடுத்தது எனது குடும்பத்துக்கல்ல. கிழக்கிலுள்ள ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் தான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். தமிழ் மக்களை இனியும் ஏமாற்ற முடியாது.


“தமிழ் மக்கள் மத்தியில் அபிவிருத்தி என்பதே இல்லை. நமது நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஒதுக்கப்பட்ட நிதிகளில் ஒரு கிராமத்துக்கு ஒரு இலட்சம் , ஐம்பதினாயிரம் மட்டும்தான் ஒதுக்கமுடியும். ஏனைய சமூகத்துக்கு கோடிக் கணக்கில் அபிவிருத்திக்கு ஒதுக்கின்றார்கள்.


“இதற்காக நான் பல அமைச்சுக்களிடம் கை ஏந்தி அபிவிருத்திகள் செய்தேன். காரணம் தமிழ் மக்களின் தேவைப்பாடு இவ்வாறு காணப்படுகின்றது. மாகாணசபை, நகர சபைகள், பிரதேச சபைகள் என்பன  தாரை வார்க்கப்பட்டுள்ளது. இது தமிழினத் துரோகமில்லையா? இதற்கெதி​ராக நான் மட்டும்தான் குரல் எழுப்பினேன்.


“படித்த தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு வேலையில்லை. வேலை கொடுப்பதற்கு அரசியல் பலமில்லை. மாற்று சமூகத்தில் உள்ளவர்களிடம்தான் பணத்தை கொடுத்து வேலையைப் பெறவேண்டிய துர்ப்பாக்கியநிலையில் தமிழர்கள் இருக்கின்றார்கள்.


“கல்வித்தராதரம் உள்ள தமிழ் உத்தியோகத்தர்கள், அரசியல் பலமின்மையால் தட்டிக்கழிக்கப்படுகின்றார்கள். திணைக்களங்களில் நிர்வாகப் பிரச்சினைகள் காணப்படுகின்றன. இதனை தட்டி கேட்கவும், நியமிக்கவும் பலமில்லை.


“இதற்குத்தான் அமைச்சுப் பதவி தேவையாகவுள்ளது. ஒட்டு மொத்தத்தில் எதிர்க்கட்சிப் பதவியில் இருப்பதை விட அமைச்சுப் பதவி எடுத்து வேலைத்திட்டங்களைச் செய்வது சிறப்பானதாகும்.


“நான் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றதில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்கள் எதுவிதக் குழப்பமும் அச்சமும் கொள்ளத்தேவையில்லை. நான் உங்களுக்கு நல்லதைச் செய்யவுள்ளேன்.


“வடக்கு மாகாணத்தில், இரண்டு அமைச்சுப் பதவிகள் கிடைத்துள்ளன. வடக்கு மாகாணத்தின் அரசியல் தலைமைகள் முன்னுதாரணமாக செயற்படுகின்றார்கள். அதேபோன்று, கிழக்கின் தமிழ் அரசியல் தலைமைகள் முனைப்புடன் செயற்படும் நம்பிக்கை உள்ளது” என்றார்.


நன்றி TamilmirrorPowered by Blogger.