Visual Art Movies நிறுவனத்தின் நான்காவது முழுநீளத் திரைப்படமாக உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் தலைப்பு ''கயிறு'' (KAYIRU) என அதிகாரப்பூர்வமாக 09-08-2026 அன்று வெளியிடப்பட்டது.
VisualArtMovies நிறுவனத்தின் தயாரிப்பிலும். ப.முரளிதரனின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்திலும் உருவாகும் இத்திரைப்படத்தின் தலைப்பு, வழக்கமான போஸ்டர் அல்லது டீசர் வெளியீட்டு முறைக்கு மாறாக, சிறப்பாக உருவாக்கப்பட்ட பாடல்வரிக் காணொளி (Lyrical Video) மூலம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும்.
திரைப்படத்தின் கதையையும் அதன் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல், திரைப்படத்தின் மையக்கருத்தை பார்வையாளர்களுக்கு இசை மற்றும் காட்சிகளின் ஊடாக அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சி என இயக்குநரினால் சில தினங்களிற்கு முன்னர் காணொளி ஒன்றினூடாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அப் பாடல் வெளியாகியுள்ளமை இலங்கைத் தமிழ் சினிமா சூழலில் ஒரு வித்தியாசமான முயற்சி என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
‘கயிறு’ திரைப்படம் Visual Art Movies நிறுவனத்தின் முன்னைய படைப்புகளான ‘மாயை மற்றும் ‘தளராதவன்’ மற்றும் ‘போடியார்’ ஆகியவற்றைத் தொடர்ந்து உருவாகும் நான்காவது திரைப்படமாகும்.
இத் திரைப்படத்தின் கதை இலங்கையின் வடகிழக்குப் பகுதி, அனுராதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது எனவும், படப்பிடிப்புகளும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற உள்ளதாகவும் தயாரிப்புத் தரப்பால் அறிவிக்கப்பட்டுள்ளமை கயிறு திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கிறது.
Visual Art Movies நிறுவனத்தின் இந்த புதிய திரைப்பட முயற்சிக்கு திரையுலக இரசிகர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் மத்தியில் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.






