மட்டக்களப்பு பாடசாலைகளுக்கு கணினிகளை வழங்கிய ESOFT – EduConnect சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் மற்றுமொரு முக்கிய முன்னெடுப்பு
இலங்கையின் தகவல் தொழில்நுட்பக் கல்வித் துறையில் 26 ஆண்டுகளாக முன்னணி நிறுவனமாக விளங்கும் ESOFT, தனது EduConnect சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் கணினி வசதிகள் குறைவாக உள்ள பாடசாலைகளுக்கு கணினிகளை வழங்கியுள்ளது.
மாணவர்களுக்கு தரமான டிஜிட்டல் கல்வி வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், ESOFT Metro Campus – மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து கல்வி வலயங்களிலும் விரிவான தேவையறிதல் ஆய்வை மேற்கொண்டது. அதன் அடிப்படையில், அதிக தேவையுடைய ஒவ்வொரு கல்வி வலயத்திலிருந்தும் இரண்டு பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டு, அவற்றிற்கு கணினிகள் வழங்கப்பட்டன.
இந்த முயற்சியின் மூலம் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) கற்றல் சூழல் மேலும் வலுப்பெறுவதுடன், மாணவர்கள் டிஜிட்டல் உலகிற்குத் தேவையான திறன்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.
இந்த வழங்கல், நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் EduConnect திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதன் கீழ், ESOFT நிறுவனத்தின் கிளைகள் 265 கணினிகளை இலங்கையின் பல்வேறு பாடசாலைகளுக்கு வழங்கியுள்ளன.
கல்வியின் மூலம் சமூக மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற தனது 26 ஆண்டுகால அர்ப்பணிப்பை தொடர்ந்தும் முன்னெடுத்து வரும் ESOFT, தொழில்நுட்ப அணுகலை அனைத்து மாணவர்களுக்கும் சமமாக வழங்குவதன் மூலம் டிஜிட்டல் இடைவெளியைக் குறைத்து, எதிர்கால தலைமுறையை திறனுள்ள குடிமக்களாக உருவாக்க உறுதிபூண்டுள்ளது.
