மட்டக்களப்பைச் சேர்ந்த சிரேஸ்ட ஊடகவியலாளரும் அகில இலங்கை சமாதான நீதிவானும் சமூக சேவையாளருமான "தேசிய ஜோதி, சாமஶ்ரீ தேசமானிய" உதயகுமார் உதயகாந்த் அவர்களுக்கு ஊடகச் செயற்பாடு, அவரால் ஆற்றப்பட்டுவரும் சமூக செயற்பாடுகள் மற்றும் அவரது நிர்வாக திறன் ஆகியவற்றை கௌரவிக்கும் வகையில் கௌரவ கலாநிதி (முகாமைத்துவம்) [Honorary Doctorate in Management] பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இந்த கௌரவப் பட்டமானது அமெரிக்காவினை (USA) தளமாக கொண்டு இயங்கும் பல்கலைக்கழகம் ஒன்றினால் 2026 ஜூலை 20 ஆம் திகதி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
சமூக நலன், தன்னலமற்ற மனிதாபிமானப் பணிகள், சமூக மேம்பாடு மற்றும் பொதுச் சேவைகளில் தொடர்ந்து ஆற்றிவரும் பங்களிப்பு மற்றும் இவரது நிர்வாக திறன் ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையிலேயே இக்கௌரவம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவராகவும், மட்டக்களப்பு மாவட்ட சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சமூக அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றின் ஸ்தாபக தலைவராகவும் கிழக்கு மாகாண ஊடக இல்லத்தின் செயலாளராகவும், மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் மீயுயர் பீட உறுப்பினராகவும், ஊடக அமைப்புக்களில் உயரிய பதவிகளிலும் பல்வேறு சமூக மட்ட அமைப்புக்களில் மீயுயர் குழு உறுப்பினராகவும், ஆலோசகராகவும் சமூக சேவையினை ஆற்றிவரும் இவர் அரச சேவையில் 18 வருடங்களாக முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராகவும் கடமையாற்றி வரும் நிலையில் ஏலவே இவரால் ஆற்றப்பட்ட சமூக சேவை மற்றும் நிர்வாக திறனை பாராட்டி "தேசிய ஜோதி, சமூக ஜோதி, சாமஸ்ரீ தேசமானிய, சாதனைத் தமிழன், சமூகப் பித்தன்" உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இவரது தொடர் அர்ப்பணிப்புடனான சமூக செயல்பாட்டிற்கும் நிர்வாக திறனுக்கும் இவருக்கு கிடைத்த மிக முக்கியமானதொரு அங்கீகாரமாக இந்தக் கௌரவம் கருதப்படுகின்றது.
அதே வேளை மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் பிரதான இணைப்பாளர்களான "தேசிய ஜோதி" Eng த.மயூரன், "தேசிய ஜோதி"ஐ.ரகுபரன் (தொழிலதிபர்) ஆகியோருக்கும் சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் உறுப்பினர் "சமூக ஜோதி" உ.தேவகுமார் ஆகியோருக்கும் இவர்களால் ஆற்றப்பட்டுவரும் சமூக சேவைக்காக கௌரவ கலாநிதி பட்டம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
