கோறளைப்பற்று கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பட்டியடிவெளி – வகுலாவலை விவசாயக் கண்டத்தில் அமைந்துள்ள பிரதான தரைப்பாலம் (Causeway) பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், நீர்ப்பாசன மற்றும் காணிகள் பிரதி அமைச்சர் அரவிந்த விதாரண கலந்துகொண்டு தரைப்பாலத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
வகுலாவலை பிரதான வீதியில் அமைந்திருந்த குறித்த தரைப்பாலத்தின் ஊடாக வெள்ள காலங்களில் நீர்ப்பாய்ச்சல் அதிகரிப்பதால், அவ்வீதியூடாக பயணிக்கும் பொதுமக்கள் நீண்ட காலமாக பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.
இதனையடுத்து, குறித்த இடத்தில் முறையான பாலம் ஒன்றை அமைத்துத் தருமாறு பல்வேறு தரப்பினரிடமும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், நீண்ட காலமாக அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருந்தது.
இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முன்னெடுப்பின் கீழ் குறித்த தரைப்பாலம் அமைக்கப்பட்டு தற்போது பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் விவசாய, நீர்ப்பாசன மற்றும் காணி அமைச்சு ஆகியவற்றின் மாவட்ட இணைப்பாளர் கே.திலகநாதன், மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர், பாலச்சேனை கமநல சேவைப் பிரிவுக்குட்பட்ட விவசாயக் கண்டங்களின் தலைவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



