மட்டக்களப்பு காங்கேயனோடை பகுதியில் ரூ.15 மில்லியன் செலவில் புதிய வடிகான் அபிவிருத்தித் திட்டம் ஆரம்பம்!!
அரசாங்கத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்திற்கு நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் கீழ், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக காங்கேயனோடைப் பிரதேசத்தில் 500 மீட்டர் தூரத்திற்கு 15 மில்லியன் ரூபாய் மதிப்பிலான வடிகால் அமைக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த திட்டத்தின் ஆரம்ப பணியினை அங்குரார்ப்பனம் செய்துவைத்தார்.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழு தலைவருமான கந்தசாமி பிரபு கருத்து தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்தில் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும், எதிர்க்கட்சியினர் அரசாங்கம் கிழக்கு மாகாணத்தை புறக்கணித்து விட்டதாக குறை கூறி வருகின்றனர். ஆனால் உண்மையில், கிழக்கு மாகாணத்திற்காக தொடர்ந்து நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு, அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன என தெரிவித்தார்.