கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் ஓரங்கட்டப்பட்ட சிறுபாண்மைக்குழுக்களின் அரசியல் பிரசன்னம் மற்றும் அதற்கான சவால்கள் தொடர்பான வட்டமேசை கலந்துரையாடல்!!
கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் ஓரங்கட்டப்பட்ட சிறுபாண்மைக்குழுக்களின் அரசியல் பிரசன்னம் மற்றும் அதற்கான சவால்கள் தொடர்பான வட்டமேசை கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது.
கிழக்கு சமூக அபிவிருத்தி மையமானது சிறுபாண்மை உரிமைகள் குழு சர்வதேசத்துடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றிய நிதி அனுசரனையுடன் “இலங்கையில் ஜனநாயகம் மற்றும் பன்மைத்துவத்துக்காக சிறுபாண்மையினரை வலுவூட்டல்” என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பல்வேறு சமூக பொருளாதார காரணிகளால் ஓரங்கட்டப்பட்ட சிறுபாண்மைக் குழுக்களுக்கு ஆதரவாக குரலெழுப்பும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றது.
இம்முயற்சியின் ஓரங்கமாக மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் வாழ்கின்ற நலிவுற்ற நிலையிலுள்ள சிறுபாண்மை சமூகக்குழுக்களின் அரசியல் பங்குபற்றுதல் மற்றும் அதற்காக அவர்கள் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்ற சவால்கள் மற்றும் தடைகள் தொடர்பாக கிழக்கு மாகாணத்திலுள்ள நாற்பத்தைந்து உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்,
பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், உள்ளூராட்சி மன்றச் செயலாளர்கள் மற்றும் நலிவுற்ற சிறுபாண்மை சமூகக்குழுக்களின் பிரதிநிதிகளான பெண்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்கும் வட்டமேசை கலந்துரையாடல் இன்று 12.08.2025 திகதி மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள கிறீன் கார்டன் வரவேற்பு மண்டபத்தில் கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எல்.எம்.புஹாரி தலைமையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் குறிப்பாக உள்ளூராட்சி மன்றங்களில் தொடர்ந்தும் பிரதிநிதித்துவம் அற்றவர்களாக காணப்படுகின்ற ஓரங்கட்டப்பட்டுள்ள சிறுபாண்மைக்குழுக்களின் பிரதிநிதிகள், அதிலுங்குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளக ஆட்சிக்கான அரசியல் தளத்தில் வினைத்திறன் மிக்க வகையில் பங்குபற்றுவதற்குள்ள தனிப்பட்ட, சமூக சவால்கள் அல்லது தடைகள் மற்றும் அவர்களது தீர்க்கப்படாத அடிப்படை பிரச்சினைகள் ஆகியன அக்குழுக்களின் பிரதிநிதிகளாலேயே அடையாளப்படுத்தப்பட்டுள்ளதோடு, எதிர்காலத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் வினைத்திறன் மிக்க செயற்பாடுகளால் அவை எவ்வாறு களையப்படலாம் அல்லது குறைக்கப்படலாம் என்பது பற்றியும், இப்பிரச்சினைகளுக்கான நீடித்திருக்கக்கூடியதும் சாத்தியமானதுமான நேர்மறை தீர்வுகளுக்கான முயற்சிகளை உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் இக்குழுக்களையும் இணைத்துக்கொண்டு எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலின் முடிவில், கிழக்கு சமூக அபிவிருத்தி மையம் ஓரங்கட்டப்பட்ட சிறுபாண்மை குழுக்களின் பிரதிநிதிகளோடு இணைந்து தயாரித்த பரிந்துரைகளோடு கூடிய பரப்புரைப் பத்திரம் ஒன்றினை உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களிடம் கையளித்ததோடு, எதிர்காலங்களில் இக்குழுக்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதனை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.