மட்டக்களப்பு மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை!!

தேசிய சமாதானப் பேரவையும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்தும் மாவட்டத்தில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான பன்மைத்துவம், நல்லிணக்கம் மற்றும் சமூக நீதி தொடர்பான இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையின் முதல் நாள் ஆரம்ப நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது.

நல்லிணக்க ஊக்குவிப்புத்துறை தொடர்பான பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளின் திறன் மேம்பாட்டை அதிகரிப்பதை நோக்கமிகக் கொண்ட இந்த இரண்டு நாள் செயலமர்வானது    தேசிய சமாதானப் பேரவையின் திட்ட மேலாளர் நிரோஷா அந்தோனி அவர்களின் தலைமையில் தேசிய சமாதானப் பேரவையின் சர்வமத குழுவின் மாவட்ட இணைப்பாளர் ஆர்.மனோகரன் அவர்களது ஏற்பாட்டில் இன்று (31) திகதி மட்டக்களப்பில் உள்ள தனியார் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன்  அவர்கள் கலந்து கொண்டு குறித்த இரண்டு நாள் செயலமர்வினை ஆரம்பித்து வைத்தார்.

குறித்த இரண்டு நாள் பயிற்சி பட்டறையின் ஆரம்ப நிகழ்வில் மாவட்ட செயலக தேசிய ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர் வீ.சந்திரகுமார், தேசிய சமாதானப் பேரவையின் திட்ட அலுவலகர் முனிப் ரஹ்மான், தேசிய சமாதானப் பேரவையின் பல்சமய ஒன்றியத்தின் மாவட்ட உதவி இணைப்பாளர் எம்.ஐ.அப்துல் ஹமீத் உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிகழ்வில் வளவாளராக விஷன்ஸ் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி அ.மயூரன் கலந்து கொண்டு வளவாண்மை மேற்கொண்டிருந்தார்.

மேலும் இப்பயிற்சிப் பட்டறையில் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உதவிப் பிரதேச செயலாளர்கள், பதிவி நிலை உத்தியோகத்தர்கள், தேசிய ஒருமைப்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மத்தியஸ்தர் சபைகளின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது அரச பணியாளர்கள் பொதுமக்களுக்கான கடமையில் ஈடுபடும் போது சமூக நீதியுடன், சாதி மத பேதமின்றி கடமையாற்ற வேண்டியதன் அவசியத்தன்மை குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன், சர்வமத குழுவின் ஊடாக எவ்வாறு மாவட்ட மட்டத்தில் சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது, தேசிய சமாதான பேரவையின் சேவைகள் தொடர்பாகவும் இதன் போது விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன், குறித்த நிகழ்ச்சித் திட்டமானது இலங்கை தேசிய சமாதான பேரவையினால் 16 மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

















Powered by Blogger.