இலங்கை ஜனநாயக சோசலீச குடியரசின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் "நாடே முதன்மை" எனும் தொனிப்பொருளிற்கு அமைய கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களால் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 43.2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிதியானது பகுதியளவில் வீடு சேதமடைந்துள்ள பயனாளிகளின் 216 வீடுகளை திருத்தும் செயற்பாட்டிற்காகவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் பகுதியளவில் வீடுகள் சேதமடைந்த 65 பயனாளிகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களது வழிகாட்டலில் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தின் பொறியியலாளர் எஸ்.விநோராஜ் தலைமையில் இன்று (28) திகதி மட்டக்களப்பில் இடம் பெற்றது.
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் பொறியியலாளர் வீ.சுகுமாரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்விற்கு விசேட அதிதியாக சுற்றுலா துறை அமைச்சின் மாவட்ட இணைப்பாளரும் மாநகர சபையின் உறுப்பினருமாகிய வணித்தா செல்லப்பெருமாள் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து சிறப்பித்ததுடன் பயனாளிகளுக்கான காசோலைகளையும் வழங்கியிருந்தனர்.
பகுதியளவில் சேதமடைந்த வீடுகளை திருத்தும் செயற்பாட்டிற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 57 பயனாளிகளுக்கு 100000/- வீதமும், இரண்டாம் கட்ட கொடுப்பனவினை பெறும் எட்டு பயனாளிகளுக்கு 40,000/= வீதமும் காசோலைகள் இன்று வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் செல்வி யதுசாயினி சுதாகரன் உள்ளிட்ட அலுவலகத்தின் உத்தியோகத்தர்களும், பயனாளிகளும், தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.