தேசிய சமாதானப்பேரவையின் விசேட கலந்துரையாடலொன்று இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
தேசிய சமாதானப்பேரவையின் இயக்குனர் Dr.ஜெஹான் பெரேரா அர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக இடம் பெற்ற விசேட கலந்துரையாடல் வண்ணாத்தி பூச்சி சமாதான பூங்கா திட்ட முகாமையாளரும் பிரதேச சர்வமத குழு இணைப்பாளருமாகிய து.நகுலேஸ்வரன் தலைமையில் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தேசிய சமாதான பேரவையின் சிரேஸ்ட திட்ட முகாமையாளர்களான எம்.விஜயகாந்தன் மற்றும் மதனி உவைஸ் ஆகியோர் கலந்துகொண்டு வளவாண்மை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது விசேடமாக பிரதேச ரீதியாக சர்வமத குழுவின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் எவ்வாறு சமய, சமூக ரீதியாக இன நல்லுறவை போனுவது, இனங்களிடையே சமாதான சகவாழ்வை எவ்வாறு முன்னெடுப்பது, இன ஒருமைப்பாட்டை அரசாங்கம் முன்னெடுப்பதாயின் அதற்காக அரசுக்காக நாங்கள் எவ்வாறான ஆலோசனைகளை வழங்க வேண்டும், முரண்பாடுகளை தவிர்ப்பதாயின் நாம் எவற்றை செய்ய வேண்டும், சமூக பொலிஸ் குழுக்களை திறம்பட இயக்க வேண்டியதன் நோக்கம், தேசிய சமாதானப் பேரவையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதில் உள்ள சவால்கள் போன்ற பல்வேறுபட்ட பிரச்சனைகள் தொடர்பாக இதன் போது விரிவாக ஆராயப்பட்டதுடன் தெளிவூட்டல்களையும் மேற்கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் பிரதேச சர்வமத குழு உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
தேசிய சமாதானப்பேரவையானது தொடர்ச்சியாக சேசிய ரீதியாக பல்வேறுபட்ட சமாதான சகவாழ்வு தொடர்பான திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்திலும் சமாதான சகவாழ்வு மற்றும் மத நல்லிணக்கம் தொடர்பாக பல செயற்றிட்டங்களை நடாத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.