தேசிய ரீதியில் நடாத்தப்படும் அரச திணைக்களங்களுக்கிடையிலான மாபெரும் வலைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி நாளை மட்டக்களப்பில் ஆரம்பம்!!
தேசியத்தையும் தாண்டி சர்வதேச ரீதியில் வலைப்பந்தாட்டத்தில் சாதனை படைத்து தற்போது அவுஸ்திரேலியாவில் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக திகழ்ந்து வரும் தர்ஷினி போன்ற வீராங்கனையை இந்த மட்டக்களப்பு மண்ணில் உள்ள பல்கலைக்கழகத்தில் இருந்தே நாம் இனங்கண்டோம், அதே போன்றதொரு தர்ஷினியை தேடியே மீண்டும் மட்டக்களப்பிற்கு வந்துள்ளோம் என இன்று மட்டக்களப்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது இலங்கை அரச சேவை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவி திரிக்ஷி நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தேசிய ரீதியில் அரச திணைக்களங்களுக்கு இடையில் வருடாந்தம் நடாத்தப்படும் மாபெரும் வலைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி இம்முறை வரலாற்றில் முதல் தடவையாக மட்டக்களப்பில் நாளை ஆரம்பிக்கப்பட்டு இடம் பெறவுள்ள நிலையில், அது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷனி ஸ்ரீகாந்த் அவர்களது ஏற்பாட்டில் இன்று மாலை மட்டக்களப்பு வெபர் மைதானத்தின் உள்ளக அரங்கில் இடம்பெற்றது.
தேசிய ரீதியில் உள்ள திணைக்கள உத்தியோகத்தர்களுக்கிடையில் நாளை காலை வெபர் மைதானத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள வலைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி தொடர்ச்சியாக 3 தினங்கள் இடம் பெறவுள்ள நிலையில் இச் சுற்றுப்போட்டியில் 25 தொடக்கம் 30 வரையான அணிகளின் பங்குபற்றலுடன் லீக் மற்றும் நொக்கவுட் முறையில் இடம்பெறவுள்ளதுடன் போட்டி தொடரானது நான்கு பிரிவுகளாக இடம் பெறவுள்ளதுடன், பெண்கள் மற்றும் ஆடவர்களும் இப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.
இலங்கை அரச சேவை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவி திரிக்ஷி நாணயக்கார அவர்களது தலைமையில் நாளை காலை 8.00 மணிக்கு வெபர் மைதானத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொள்ளவுள்ளதுடன், இந்நிகழ்வில் இலங்கை அரச சேவை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் மற்றும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரச திணைக்களங்களின் உயரதிகாரிகள், விளையாட்டு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது,