வளமான தேசத்துக்கான அரசியல் பயணம் தொடரும் - மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு

“தேசிய மக்கள் சக்தி மீதும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைத்து மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கும்  நன்றி. வளமான வாழ்க்கைக்காகவும் தேசத்தின் நன்மைக்காகவும் மாவட்ட மக்களின் நன்மைக்காகவும் எங்கள் அரசியல் பயணம் தொடரும்“ -என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

நடந்து முடிந்த 10 ஆவது பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட கந்தசாமி பிரபு  55,498 வாக்குகளைப் பெற்று அதில் 14,856 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்படடுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன்  (15) அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கந்தசாமி பிரபு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியிலிருந்து ஒரு பாராளுமன்ற உறுப்பினரை மாவட்ட மக்கள் தெரிவுசெய்துள்ளனர். என்னோடு இந்தத் தேர்தலில் வேட்பாளராகப் பயணித்த அனைத்து வேட்பாளருக்கும் நன்றி.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கீழ் ஒன்றுசேருகின்ற இந்த அரசாங்கம், மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதும் ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை  உயர்த்துவதுமே  எமது அடிப்படைக் கொள்கை. இந்தக் கொள்கையின் அடிப்படையில் மக்களின் நன்மைக்காகவே எங்கள் அரசியல் பயணம் தொடரும்.

அதேவேளை, தேசிய மக்கள் சக்தி மீதும் நம்பிக்கை வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைத்து எமது உறவுகளுக்கும் தோழர் தோழிகளுக்கும் தோழனாகத் தொடர்ந்து பயணிப்பேன்“ என தெரிவித்தார்.




Powered by Blogger.