மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் சபைக்கான இணையத்தளம் மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் சபையின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.முரளிதரன் தலைமையில் இன்று (22) திகதி மட்டக்களப்பில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
புதிய மாவட்ட செயலகத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கூடத்தில் இடம் பெற்ற குறித்த நிகழ்வானது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷனி ஸ்ரீகாந்த் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் அவர்களின் மேற்பார்வை மற்றும் ஒழுங்கமைப்பில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) திருமதி.நவரூபரஞ்ஜனி முகுந்தன், மாவட்ட தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் திருமதி.கே.லக்ஷிக்கா, மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் தி.மதிராஜ், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், AULanka நிறுவனத்தின் பிரதிநிதிகள், மாவட்ட சிறுவர் சபை தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சிறுவர் சபை உறுப்பினர்கள் என பலரும் இதன் போது கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
இதன் போது மாவட்ட சிறுவர் சபையினால் மாதாந்தம் வெளியிடப்படவுள்ள "துளிர்" செய்திமடலின் முதல் வெளியீட்டின் முதல் பிரதி மாவட்ட சிறுவர் சபை பிரதிநிதிகளினால் மாவட்ட அரசாங்க அதிபரிற்கு வழங்கி வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், ஏனைய அதிதிகளுக்கு சிறப்பு பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
அத்தோடு மாவட்ட சிறுவர் சபையின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச சிறுவர் சபையின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில உறுப்பினர்களுக்கும் இன்றைய தினத்தில் மாவட்ட செயலகத்தில் "நெறிமுறையுடன் கூடிய ஊடக செய்தி அறிக்கையிடல்" எனும் தொனிப்பொருளில் இன்று வெளியிட்டு வைக்கப்பட்ட மாதாந்த செய்தி மடலுக்கான செய்திகளை தயாரிப்பதற்காக முழு நாள் பயிற்சி நெறியானது சிரேஸ்ட ஊடகவியலாளரும் அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய உ.உதயகாந்தினால் நிகழ்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.