அண்மையில் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்ட அம்மா வீடு எனும் குழந்தைகள் பராமரிப்பு நிலையத்திற்கு ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) அதிகாரி இனோகா பண்டாரகமகே உள்ளிட்ட குழுவினர் 13-03-2024 அன்று விஜயம் செய்து நிலையத்தைப் பார்வையிட்டதோடு, விருந்தினர் பதிவேட்டிலும் தமது கருத்துகளையும் பதிவு செய்துள்ளனர்.
மனிதநேயம் நம்பிக்கை நிதியத்தின் நிதி அனுசரணையில் LIFT தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினால் நடாத்தப்படும் இந் நிலையத்தின் மூலம் நகர்ப்புறப் பெண்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் வேலைக்குச் செல்லும் பெற்றோரின் குழந்தைகளுக்கான சிறந்த பராமரிப்பு சேவைகளை வழங்குதல் எனும் இரண்டு நோக்கங்கள் பூர்த்தி செய்யப்டுவதாக LIFT நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி. ஜானு முரளிதரன் தெரிவித்தார்.
நிலையத்தில் காணப்படும் வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், சிறுவர் பாதுகாப்புக் கொள்கை மற்றும் பராமரிப்பாளர்கள் தொடர்பில் தான் மிகவும் திருப்தி அடைவதாகவும் UNICEF அதிகாரி இனோகா இதன்போது தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பில் நிலையப் பொறுப்பாளர் உதயகுமாரி, நிதி-நிர்வாக உத்தியோகத்தர் சந்திரா, LIFT நிறுவன உத்தியோகத்தர்கள், குழந்தைகள் பராமரிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.