“தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்'' - கிழக்குப் பல்கலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சம்பளப் பிரச்சினை மற்றும் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று (19) மட்டக்களப்பு அரசடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரி கற்கைகள் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் தீர்மானத்துக்கு இணங்க நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அமைவாக கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக நிருவாக உத்தியோகத்தர்கள் சங்கம் இணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது “2016ஆம் ஆண்டு சம்பள சீர்திருத்தத்துக்கமைவாக பல்கலைக்கழக ஊழியர்களுக்கு வழங்குவதாக அரசினால் வாக்குறுதியளிக்கப்பட்டு இன்றுவரை வழங்கப்படாதுள்ள 15 வீத சம்பள அதிகரிப்பை வழங்கு“, “மாதாந்த இடர் கொடுப்பனவை அதிகரி, “பல்கலைக்கழக சேமலாப நிதியை வேறு தேவைகளுக்கு பயன்படுத்தாதே“, “அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கேற்ப ஊதிய அதிகரிப்புச் செய்“, “பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக காணப்படும் பதவிவெற்றிடங்களை நிரப்பு“, “மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையில் கைவைக்காதே“, “அரசே ஏற்றுக் கொள்ளப்பட்ட 107 வீத சம்பள அதிகரிப்பை வழங்கு“ போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் ஒருமணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர். இதேவேளை ஒவ்வொரு வாரமும் தீர்வு கிடைக்கும் வரை இப் போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
Powered by Blogger.