தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஊடாக இளம் விவசாய முயற்சியாளர்களை உருவாக்கும் திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பம்!!


நாடளாவிய ரீதியில் "சக்திமிக்க இளைஞர்களை உருவாக்குவோம்" எனும் தொனிப்பொருளில் இளம் விவசாய முயற்சியாளர்களை உருவாக்கும் திட்டத்தினை விவசாய அமைச்சும் இளைஞர் விவகார விளையாட்டு துறை அமைச்சும் இணைந்து தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஊடாக முன்னெடுத்துவருகின்றது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 30 இளைஞர்களுக்கு விவசாய உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் என்.குகேந்திரா தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் இன்று (20) திகதி இடம் பெற்றது.

பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்த நிகழ்விற்கு விசேட அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட விவசாய உதவிப் பணிப்பாளர் ஜனாப் சனீர் கலந்து சிறப்பித்துள்ளார்.

இந்நிகழ்வில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான திருமதி நிஷாந்தி அருண்மொழி, மா.சசிகுமார், நிஸ்கோ பொது முகாமையாளர் திருமதி சதீஸ்வரி, மாவட்ட தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் ஏ.எம்.ஹனீபா, மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடமையாற்றும் இளைஞர் சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் இளம் விவசாய முயற்சியாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது மாவட்ட பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்த மாவட்ட அரசாங்க அதிபரினால் தெரிவு செய்யப்பட்ட இளம் விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் 10 ஆயிரம் இளைஞர்களை நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விவசாய துறையில் ஊக்குவிக்கும் வகையிலே இத்திட்டமானது அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் தமது பிரதம அதிதி உரையில் இளம் முயற்சியாளர்களை நாம் எமது மாவட்டத்தில் உருவாக்க வேண்டும் அதன் ஊடாகவே எமது மாவட்டத்தை பொருளாதார ரீதியாகவும் கட்டியொழுப்ப முடியும் என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
Powered by Blogger.