இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் செட்டிபாளையத்தை சேர்ந்த ஓவியர் றமணனின் ஓவியக் கண்காட்சி இந்தியா கொல்கத்தாவில் இடம்பெறுகிறது
மட்டக்களப்பு செட்டிபாளையத்தை சேர்ந்த ஓவியரும் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் விரிவுரையாளருமாகிய வேதராணியம் கோகுலறமணன் அவர்களின் முதலாவது சர்வதேச ஓவியக் கண்காட்சி இந்தியாவில் கொல்கத்தாவில் நேற்று முதல் இடம்பெறுகிறது.
சிறுவயதுமுதல் கலைத்துறையில் ஆர்வம்மிக்கவராக விளங்கிய இவர் தன்னை முழுமையாக வளப்படுத்திக்கொண்டு சிறப்புமிக்க ஓவியக் கலைஞராக திகழ்ந்து வருகின்றார். இவரது கடந்த கால தமிழர் பண்பாட்டியல் சார்ந்ததும் தமிழர் கூத்துமரபு சார்ந்ததுமான ஓவியங்கள் பல பலராலும் பாராட்டிப்பேசப்பட்டுள்ளதோடு பல ஓவியக்கண்காட்சிகளிலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நவீனத்துவ ஓவியக்கலையில் ஈடுபாடுடைய இவர் சிங்கள மக்களிடம் சிறப்புற்று விளங்கிய தென்னங்குருத்தோலை படைப்புக்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் முதலில் அறிமுகப்படுத்தி பல கலைத்துவமான படைப்புக்களை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.