காட்டு யானைகளுக்கு உணவு வழங்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!


வனப்பகுதியில் வீதி ஓரங்களில் சுற்றித்திரியும் காட்டு யானைகளுக்கு உணவு வழங்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

வனப்பகுதி வழியாக செல்லும் நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள், வீதி ஓரங்களில் சுற்றித்திரியும் காட்டு யானைகளுக்கு உணவு வழங்குவதால், விலங்குகள் வீதிக்கு வருவது வழக்கம்.

இதனால் அந்த வீதிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு இடையூறாக யானைகள் உணவு பெறும் சம்பவங்கள் கடந்த காலங்களில் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன.

எனவே, வனப்பகுதிகளை கடந்து செல்லும் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது வன விலங்குகளுக்கு உணவளிப்பதை தவிர்க்குமாறு வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதனிடையே, அனுமதியற்ற மின்கம்பிகளில் மோதி கடந்த 7 மாதங்களில் 36 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.

வன விலங்குகளிடம் இருந்து விவசாய நிலங்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பதற்காக சிலர் பாதுகாப்பற்ற மின் கம்பிகளை அமைத்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் யானைகள் கிராமங்களுக்குள் அத்துமீறி நுழைவதைத் தடுக்கும் வகையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குறிப்புகளின்படி மின்வேலிகளை அமைக்கிறது. அந்த முறையின்றி சிலரால் அமைக்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்படாத மின் கம்பிகளால் யானைகள் உயிரிழப்பதாகச் செய்திகள் வருகின்றன.

எனவே தனியார் மின்வேலி அமைக்கும் பட்சத்தில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே அதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவ்வாறு அமைக்காத மின்வேலிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Powered by Blogger.