மட்டக்களப்பில் "சயன்ஸ் எக்ஸ்போ 2023" மாபெரும் விஞ்ஞானக் கண்காட்சி!!


மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட புனித சிசிலியா பெண்கள் கல்லூரியில் "சயன்ஸ் எக்ஸ்போ 2023" மாபெரும் விஞ்ஞானக் கண்காட்சி கடந்த 28 மற்றும் 29 ஆந் திகதிகளில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி நிதாஞ்சலி தலைமையில்  குறித்த மாபெரும் விஞ்ஞானக் கண்காட்சி கடந்த 2 தினங்கள் பாடசாலை வளாகத்தில்  இடம்பெற்றது. 

பாடசாலை மாணவச் சமூகத்தின் ஆற்றல் மற்றும் திறமைகளை  இளம் கண்டுபிடிப்பாளர்களாகவும் படைப்பாளர்களாகவும் அடையாளப்படுத்தும் விதமாக மாணவிகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் களமாக இக்கண்காட்சியை  நடாத்தியதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

இக்கண்காட்சியில் மாணவிகளின் ஆளுமைகள், விஞ்ஞான செயல்மாதிரிகள், விஞ்ஞானக்  காட்சிப் பொருட்கள், நேரடி செயல் விளக்கம், நிழற்பட மாதிரிகள், விஞ்ஞான ரீதியான செயல் விளக்கம், கோள் மண்டலம், மெய் நிகர் நிகழ்ச்சி, முப்பரிமாணக் காட்சி, தனியாள் சுகாதார ஆலோசனைக் கூடம் என்பன மூலம் வெளிப்படுத்தப்பட்டன.

இக்கண்காட்சியை பிரதேசத்தின் ஏனைய பாடசாலை மாணவர்களும், பொது மக்களும் பார்வையிட்டனர். 

இதன்போது, மாணவிகளால் உருவாக்கப்பட்ட தயாரிப்புகளை பார்வையாளர்களுக்கு  செயன்முறையில் விளங்கப்படுத்தியதனால் பார்வையாளர்கள் அனுபவங்களை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.





























Powered by Blogger.