டெங்கு நுளம்பை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து முற்றாக ஒழிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் இன்று (09) திகதி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் தற்போதைய காலநிலை மாற்றத்தினால் டெங்கு நோயின் தீவிரத்தன்மை குறைவடைந்த போதிலும் முற்றாக டெங்கு நுளம்பின் பெருக்கம் கட்டுப்படுத்தப்படவில்லை.
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் டெங்கு நோயாளர்கள் பதிவாவியுள்ள நிலையில் பிரதேச சுகாதார அதிகாரி அலுவகம், பிரதேச செயலகம், மாநகரசபை, பொலிசார், முப்படையினர் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
டெங்கு பரவக்கூடிய ஆபத்தான இடங்கள், வீடுகள், நீர் தேங்கும் இடங்கள், என்பவற்றை அடையாளம் கண்டு அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் இதன்போது அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், விளையாட்டுக் கழகம் மற்றும் இளைஞர் கழகங்கள், சமுர்த்தி பயன்பெறுனர், பொதுமக்கள், அனைவரும் ஒன்றிணைந்து டெங்கினை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் அவசியம் தொடர்பாக இதன் போது மாவட்ட அரசாங்க அதிபரினால் சுட்டிக்காட்டப்பட்டது.
இச் செயற்திட்டத்தின் கிழ் நாளை (10) திகதி பெரிய ஊறணி, கருவேப்பங் கேணி, வெட்டுக்காடு, ஞானசூரியம் சதுக்கம் ஆகிய பிரதேசங்களில் நேரடியாகப் பார்வையிட்டு, டெங்கு ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஜீ.சுகுணன், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், வைத்தியர்கள், முப்படையினர் பொலிசார், சுகாதார அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்ததுடன், தமது ஆக்கபூர்வமான கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர்.