உலகளாவிய இராமகிருஷ்ண மிஷன் துணைத் தலைவருக்கு மட்டக்களப்பு மக்களால் இன்று அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
உலகளாவிய இராமகிருஷ்ண மிஷனின் துணைத் தலைவரும், சென்னை இராமகிருஷ்ண மடத்தின் தலைவருமான அதிவண ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தா ஜி மஹராஜ் 5 நாள் விஜயத்தை மேற்கொண்டு நேற்று 18 ஆம் திகதி பி.ப 3.00 மணியளவில் மட்டக்களப்பிற்கு வருகை தந்தபோது மட்டக்களப்பு இந்து வர்த்தக ஒன்றியத்தினர், ஆலயங்களின் நிருவாகத்தினர் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பொதுமக்களும் இணைந்து அமோக வரவேற்பளித்திருந்தனர்.
மட்டக்களப்பு நகர் மணிக்கூட்டுக்கோபுரத்திற்கு அருகாமையில் சுவாமிக்கு வர்த்தக சங்க தலைவர் தேசபந்து எம்.செல்வராசா அவர்களினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், மட்டக்களப்பு வர்த்தக சங்க பிரதிநிதிகளால் வரவேற்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து சுவாமியின் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு கல்லடி மணிக்கூட்டுக் கோபுரத்தடியில் இருந்து அமோக வரவேற்பளிக்கப்பட்டு சுவாமியை ஊர்வலமாக மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிசன் வரைக்கும் மேள தாள இசை முளங்க அழைத்துச் சென்று, ராமகிருஷ்ண மிஷன் ஆசிரம திருக்கோயிலில் பூசை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தது.
இதன்போது மட்டக்களப்பு இந்து வர்த்த ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தாக சாந்தி வழங்கும் நிகழ்வு ராமகிருஷ்ண மிஷன் ஆசிரம வளாகத்தில் இடம்பெற்றிருந்தது.
எதிர்வரும் 22 ஆம் திகதி வரை இவர்கள் மட்டக்களப்பில் பல நிகழ்வுகளில் கலந்து கொள்ள இருப்பதாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீல மாதவானந்தா ஜீ மகராஜ் தெரிவித்தார்.