வாகரை வட்டுவான் இறால் வளர்ப்பு திட்டம் : பிரச்சனைக்கு ஒரு மாதத்தில் தீர்வு - அமைச்சர் டக்ளஸ்


மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில்  சுனாமியால் பாதிக்கப்பட்ட வட்டுவான் கிராமத்தில் 27 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இறால் வளர்ப்பு திட்டம் தனியார் ஒருவரின் ஆளுகைக்குள் சென்றுள்ளது. இந்த பிரச்சனைக்கு நீதிமன்றத்தின் ஊடாகவோ அல்லது பேச்சுவார்த்தை மூலமாகவோ ஒரு மாதகாலத்தினுள் இதற்கு தீர்வு காணப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் வட்டுவான் இறால் வளர்ப்பு திட்ட பிரச்சனை தொடர்பான கலந்துரையாடல் கடற்தொழில், மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கடந்த திங்கட்கிழமை (10) இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 2004 ம் ஆண்டு சுனாமி பேரலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்காக அப்போது கொண்டுவரப்பட்ட இறால் வளர்ப்பு திட்டம் தெரிவு செய்யப்பட்டு 27 பயனாளிகளுக்கு வளங்கப்பட்டது. இதனை தனி ஒருவர் தற்போது தனது ஆளுமைக்குள் உட்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் எனது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதுடன் மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்ந்தபோது இந்த பிரச்சனை தெரியவந்தது. எனவே இது ஒரு இடியப்ப சிக்கலாக உள்ளது. இதனை நீதிமன்றத்தின் ஊடாக அல்லது பேச்சுவார்த்தை ஊடாக ஒரு மாதகாலப்பகுதியில் தீர்வு எட்டப்படும்.

அதேவேளை, மட்டக்களப்பில் மாத்திரமல்ல இலங்கை பூராகவும் சட்டவிரோத கடற் தொழில் ஈடுபடுவதை தடுப்பதற்கு அந்தந்த பகுதி மீனவர் சங்கங்கள் மற்றம் கடற்படையினர், கடல் தொழில் திணைக்களம் பொலிசார் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேவேளை, மட்டக்களப்பில் கடலில் வலையை வீசிவிட்டு அதனை அடுத்த நாள் எடுக்க போகும் முன்னர் அதனை ஒரு குழு களவாடி வருகின்றது. இது தொடர்பாக கடற்படை மற்றும் கடற்றொழில் திணைக்களம் இணைந்து ஒரு திட்டம் அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த மாவட்டத்து மக்கள் கடற்தொழில் நீர் வேளாண்மைக்கு ஊடாக சுய பொருளாதாரத்தை அடைவதை மாத்திரமல்ல நாட்டுக்கும் நல்ல வருமானத்தை தேடிக் கொடுக்கும் வகையில் உணவு பாதுகாப்பு விடயத்தை உள்ளடக்கி சுற்றுலாத்துறையை முன்னெடுக்க உள்ளோம்.

இந்தியா கேரளா வாவிகளில் சுற்றுலாதுறை முன்னேற்றம் அடைந்துள்ளது. அதுபோல மாவட்டத்திலுள்ள 3 வாவிகளில் உல்லாச துறையை மேம்படுத்துவதுவதற்கு திட்டம் தந்துள்ளனர். அதேபோல கல்லடி பழைய பாலத்தில் அமைச்சர்களின் கூட்டம் நடாத்துவது தொடர்பாகவும் ஜனாதிபதியுடன் பேசி முடிவெடுக்கவுள்ளேன்.

கல்லடி பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள மீன்பிடி திணைக்களத்தின் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை செயலிழந்துள்ளது. அதில் சமூகவிரோத செயல்கள் இடம்பெறுவதுடன் அடிக்கடி தீமூட்டப்படுவதாக அறிந்துள்ளேன். அதற்கு 3 மாதத்துக்குள் தீர்வு காணப்படும் என்றார்.Powered by Blogger.