முஸ்லிங்களின் புனித ரமழான் நோன்பை முன்னிட்டு நடத்தப்படும் தேசிய இப்தார் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று (18) திகதி அலரிமாளிகையில் நடைபெற்றது.
தேசிய நல்லிணக்கத்துக்கான ஆசிர்வாத நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றன.
தேசிய ஒருமைப்பாட்டினை வளர்ப்பதற்கு பல தசாப்தங்களாக தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கிவரும் முஸ்லிம் பக்தர்கள் எதிர்காலத்திலும் ஒற்றுமையான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன கேட்டுக்கொண்டார்.
முஸ்லிங்களின் ரமழான் நோன்பு மாதம் ஆன்மீக சக்தியை மேம்படுத்துகின்ற அதேவேளை, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கின்றது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
நிகழ்வில் கலந்துகொண்டு பயான் உரை நிகழ்த்திய மௌலவிமார்களுக்கு அன்பளிப்புக்களை ஜனாதிபதி வழங்கினார்.
முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான அலி சப்ரி, நஸீர் அஹமட், விதுர விக்ரமநாயக்க, இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், ஊவா மாகாண ஆளுநர் முஸம்மில், பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், ஏ.எச்.எம்.பௌசி, எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.எஸ்.தௌபிக், யதாமினி குணவர்தன, அலி சப்ரி ரஹீம், எஸ்.எம்.எம்.முஷாரப் , மர்ஜான் பளீல் , தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.