ஊடகப் பணிக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த பெருமகனை இழந்தோம் - கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம்!


ஊடகப் பணிக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த பெருமகனை இழந்துவிட்டோம். அவருடைய வாழ்க்கை அனுபவங்கள் வழிகாட்டல்கள் எதிர்கால ஊடகத்துறையினருக்கு உத்வேகத்தைக் கொடுக்கட்டும் என கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம்  மறைந்த மூத்த ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் அவர்களின் மறைவையொட்டி வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் நம்மை விட்டு பிரிந்து கொடுத்திருக்கும் பாதிப்பு மிகத் துயரமானது.

ஊடகத்துறை மீது  பேரார்வமும் மனத்துணிவும் கொண்டிருந்த பெருமனிதனை இழந்துவிட்டோம் என்று தேற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

ஈழநாடு, தி ஐலண்ட், ரொய்ட்டர், பிபிசி போன்ற ஊடகங்களின் செய்தியாளராக் கடமையாற்றி  இறுதி மூச்சுவரை வீரகேசரியின் ஊடகவியலாளராகவும் அவர் கடமையாற்றியிருந்தார்.

நீண்ட காலமாக மரணத்திற்கெதிராகப் போராடிக்கொண்டே தன்னுடைய வாழ்நாள் சாதனையாக கால அதிர்வுகள், வாழத்துடிக்கும் வன்னி, மாற்றத்தை நாடும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய மூன்று மூன்று  நூல்களையும் எழுதி நான்காவது நூலான, 

“நினைவுகள் நிகழ்வுகள் நெஞ்சில் மோதும் எண்ண அலைகள்” என்ற நூலை நிறைவு நிலைக்குக் கொண்டுவந்திருந்தார். நான்காவது நூலின் நிறைவுக்கு முன்னர் அவர் மரணத்தை அணைத்துக் கொண்டார்.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியமும் சிவராம்  ஞாபகார்த்த  மன்றமும் இணைந்து வெளியிடும் ‘தராக்கி ஈழத்தமிழ் ஊடக முன்னோடி’ நூலில் அவருடைய ‘ சிவராம்- தமிழ் ஊடகத்துறையினதும் அரசியலினதும் வரலாற்று நாயகன்’  என்ற சிறப்பான கட்டுரையை எழுதியுள்ளார்.

76 வயதுடைய பொன்னையா மாணிக்கவாகசம், இலங்கையின் மூத்த ஊடகர் மட்டுமல்ல, தலை சிறந்த சமூக சிந்தனைவாதியும், இறுதி மூச்சு வரை, தற்துணிவுள்ள  பேனா முனை போராளியாகவும் திகழ்ந்தார்.

யுத்த காலங்களில் பிபிசி தமிழோசைக்காக அவர் வழங்கி வந்த செய்திகள், தமிழ் மக்கள் மத்தியில் இவருடைய ஆளுமையை வெளிப்படுத்தி இருந்தது. செய்திகளை நடுநிலை தன்மையோடு, உள்ளதை உள்ளதாகச் சொல்லி, யுத்த நிலைமையையும் தமிழ் மக்களின் அவலங்களையும் உலகுக்கு வெளிப்படுத்திய ஊடகவியலாளர்.

பல உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் துணிச்சலோடும் சோரம் போகாமலும் செயல்பட்ட துணிச்சல் மிகு பேனா முனை போராளி அத்துடன் உண்மைகளை மீள மீள பல தடவைகள் உறுதிப்படுத்தி வெளியிடுகின்ற அவருடைய பாங்கு ஊடகத்துறையில் மிக முக்கியமானது.

செய்திகள் பல்வேறு பிரச்சினைகளைக் கொடுக்கக்கூடியவை என்ற வகையில் அவர் எழுதிய செய்திக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தபோதும் விடுதலைக்குப் பின்பும் கூட இன்னமும் உத்வேகத்துடன் துணிச்சலோடு களத்தில் நின்று மக்கள் பணி செய்தார்.

ஓர் ஊடகவியலாளன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, மாணிக்கவாசகத்தை தவிர, வேறு யாரையும் நாம் முன்னுதாரணமாக கொள்ள முடியவில்லை.

அண்மையில் தான் வாழ்நாள் சாதனையாளராக இவர் கௌரவிக்கப்பட்டார். அந்த கௌரவம் சமூக அந்தஸ்தாகஇருந்தாலும், அவர் அதனை பெரிதுபடுத்திக்கொள்ளவில்லை.

மேடைகளில் பொன்னாடைகளை போர்த்தி, பெருமை பேசிக்கொள்ளும் நம்மவர் மத்தியில், ” சமூகப் பணிக்கு என்ன சாதனையாளர் விருது ” என்ற எண்ணங்கொண்டவராகவே அவர்இருந்தார்.

ஊடகம் என்பது மக்களுக்காக செய்யும் ஜனநாயகப் பணி; அந்த உன்னத பணிக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த பெருமகனை இழந்துவிட்டோம்.அவருடைய வாழ்க்கை அனுபவங்கள் வழிகாட்டல்கள் எதிர்கால ஊடகத்துறையினருக்கு உத்வேகத்தைக் கொடுக்கட்டும்.

அவரது பிரிவால் துயரத்திலிருக்கும் மனைவிக்கும்,மகளுக்கும் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


Powered by Blogger.