சூறாவளி ஏற்படும் அபாயம்! காலநிலை மாற்றம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

 காலநிலை மாற்றம் தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

இதற்கமைய தென் வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக குறைந்த அழுத்தப் பிரதேசம் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நாட்டில் கடந்த 16 ஆம் திகதி முதல் இன்றையதினம் வரையான காலப்பகுதியில் காலநிலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்திருந்தார்.

அந்தமான் தீவைச் சூழவுள்ள நிலைமை தற்போதும் காணப்படுவதாகவும், காற்றழுத்தத் தாழ்வு நிலை சிறிதளவு வளர்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் மழை அதிகரிக்குமா அல்லது சூறாவளி ஏற்படுமா என்பது உறுதி செய்யப்படவில்லை எனவும் இது சூறாவளியாக மாறி இலங்கையை பாதிக்குமா என்பதை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனினும் அவ்வாறான நிலைமை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டளவியல் அமைப்பு மற்றும் வழித்தடத்தில் உள்ள நீராவியின் அளவைப் பொறுத்தே அனைத்தும் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம்

இதன் காரணமாக வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல்,மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதுடன் காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறித்தும் எச்சரிக்கையாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Powered by Blogger.